Published:Updated:

கரூர்: மூன்று திருமணம் செய்த இளைஞர்; முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது!

கைது
கைது

மூன்று பெண்களை கரூர் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர், வெங்கமேடு வி.வி.ஜி நகர், அம்மன் நகர் 2 வது வீதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணி என்கிற பிரபு. இவர், கடந்த 2012 - ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வாழைகொம்பு கிராமத்தில் உள்ள சக்திகோபாலன் காலனியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

கரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர்! - போலீஸுக்கு பயந்து தற்கொலை!

திருமணத்தின்போது 10 சவரன் தங்க நகையும், சீர் பாத்திரங்களும், தனிக்குடித்தனம் நடத்துவதற்குத் தேவையான பொருட்களும் பெண் வீட்டார் வரதட்சணையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில், திருமணமாகி ஓர் ஆண்டுக்குப் பிறகு கரூரிலிருந்து பிரசவத்திற்காக தனது தாய் வீடு இருக்கும் பொள்ளாச்சிக்கு சென்றார் பாலசுப்பிரமணியத்தின் மனைவி.

தனது முதல் மனைவியுடன் பாலசுப்பிரமணி
தனது முதல் மனைவியுடன் பாலசுப்பிரமணி

பிரசவம் முடிந்து கைக்குழந்தையுடன் வீடு திரும்பியபோது, கணவருக்கும், கரூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் திருமணத்தை மீறிய இருப்பதை அறிந்துள்ளார். இதனால் கோபமானவர், கணவர் பாலசுப்பிரமணியிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதோடு, கணவர் பாலசுப்பிரமணியுடன் சேர்ந்து வாழ விருப்பமின்றி, கரூர் நீதிமன்றத்தில் கடந்த 2016 - ஆம் ஆண்டு விவாகரத்து வழக்கையும் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், பாலசுப்பிரமணி முறைப்படி விவாகரத்து பெறாமல் ரமணி என்ற பெண்ணை ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி தெரிந்த உறவுக்காரர்களை அழைக்காமல், கோயிலில் வைத்து ப்ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி தொடுத்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளபோதே, சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை பாலசுப்பிரமணி செய்து கொண்டது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் மனைவி புகார் கொடுத்தார். பாலசுப்பிரமணி மூன்று திருமணங்கள் செய்ததற்கான புகைப்பட ஆதாரத்துடன் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், பாலசுப்பிரமணி குடும்பத்தார் விவாகரத்து பெறாமல் மேலும் இரண்டு திருமணம் செய்துகொண்டதை ஒப்புக்கொண்டனர்.

கைது
கைது

இதனால், பாலசுப்பிரமணி , அவரது தந்தை ராமசாமி, தாய் தேவநாயகி, அவரது இரண்டாவது மனைவி ரமணி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 494 பிரிவின் கீழ் முதல் திருமணத்தை மறைத்து, மேலும் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பாலசுப்பிரமணியைக் கைது செய்து, கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மூன்று பெண்களைத் திருமணம் செய்துள்ள இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு