Published:Updated:

`அவருடன் நண்பராகத்தான் பேசினேன்!' - கும்பகோணத்தில் காதலிக்கு வாழைப்பழத்தில் விஷம் கொடுத்த காதலன்

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண் திடீரென பேசுவதை நிறுத்தியதில்தான் பிரச்னையே தொடங்கியிருக்கிறது.

ஐயப்பன்
ஐயப்பன்

கும்பகோணம் அருகே இளைஞர் ஒருவர் காதலி தன்னிடம் பேசவில்லை என்பதற்காக சந்தேகப்பட்டு வாழைப்பழத்தில் எலி மருந்து கலந்து கொடுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள நந்தவனம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும், கோபிநாதபெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். தனியார் மகளிர் சுய உதவிக் குழு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் ஐயப்பன். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஐயப்பனிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார் அந்தப் பெண்.

Representational Image
Representational Image

இதுதொடர்பாக ஐயப்பன் விசாரித்தபோது, அந்தப் பெண் வேறொரு இளைஞருடன் பேசிக்கொண்டிருப்பதை அறிந்து கொதிப்படைந்திருக்கிறார். இதையடுத்து, காதலித்த பெண்ணை நேரில் வரவழைத்துப் பேசியுள்ளார். அப்போது, வாழைப்பழத்தில் எலி மருந்தைக் கொடுத்து சாப்பிட வைத்திருக்கிறார். இதில் அந்தப் பெண் இறந்துவிடவே, ஐயப்பனைக் கைது செய்துள்ளனர் போலீஸார்.

இந்தக் கொடூர சம்பவம் குறித்துப் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய போலீஸார், `` பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பயிற்சி ஆசிரியராக ஐயப்பன் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் அதே பள்ளியில் அந்தப் பெண் பிளஸ் டூ படித்தார். அப்போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அந்தப் பெண், கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். அப்போதும் காதல் தொடர்ந்திருக்கிறது. இதன்பின்னர், பள்ளி வேலையை உதறிவிட்டு சுய உதவிக் குழு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் ஐயப்பன்.

Representational Image
Representational Image

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண் திடீரென பேசுவதை நிறுத்தியதில்தான் பிரச்னையே தொடங்கியிருக்கிறது. நேரில் அந்தப் பெண்ணைச் சந்தித்தபோது, `நான் உன்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன், நீ வேற யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறாய். நேரடியாகவே கேட்க நினைத்தும் உன்னைப் பார்க்க முடியவில்லை' எனக் கூறியிருக்கிறார் ஐயப்பன்.

இதற்குப் பதில் கொடுத்த அந்தப் பெண், ` அந்த நபருடன் நண்பராகத்தான் பழகிக் கொண்டிருக்கிறேன். நீ நினைப்பதுபோல் ஒன்றும் இல்லை, சந்தேகப்படாதே' எனக் கூறியிருக்கிறார். இந்தப் பதிலில் ஐயப்பன் சமாதானம் அடையாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர், தன்னுடைய பைக்கிலேயே வீட்டில் கொண்டு போய்விடுவதாகக் கூறி அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், வண்டியை ரெட்டிப்பாளையம் அருகே உள்ள இருட்டான பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு, `நாம் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழ வேண்டாம். வாழைப்பழத்தில் எலி விஷம் வைத்துள்ளேன். இதைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வோம்' என உருக்கமாக கூறியிருக்கிறார்.

Vikatan

இதை உண்மை என நம்பிய அந்தப் பெண்ணுக்கு ஐயப்பனே வாழைப்பழத்தை ஊட்டிவிட்டிருக்கிறார். ஆனால், ஐயப்பன் அந்தப் பழத்தைச் சாப்பிடவே இல்லை. விஷம் கலந்த பழத்தை சாப்பிட்ட அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு, தன் தந்தை ரவியிடம் நடந்ததைக் கூறிவிட்டு மயங்கி விழுந்துவிட்டார்.

இதன்பின்னர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் அந்தப் பெண் இறந்துவிட்டார். இந்த வழக்கில் ஐயப்பனைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்" என்கின்றனர்.