சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. உடனடியாக சிறுமியின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் சிறுமி பாலியல் தொல்லைக்குள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினரிடம் டாக்டர்கள் தகவலைத் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், விவரத்தை கேட்டறிந்தனர். அப்போது திருவொற்றியூர் தேரடி பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்கிற ஜெயக்குமார் என்பவரை அடையாளம் காட்டினார் சிறுமி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமி அளித்த தகவல் அடிப்படையில் முனியாண்டி என்கிற ஜெயக்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் ஜெயக்குமாரை (39) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமியின் பெற்றோர், பிரிந்து வாழ்கின்றனர். அதனால் சிறுமி, உறவினர் வீட்டில் வளர்ந்து வருகிறார். கடந்த 2-ம் தேதி தனியாக இருந்த சிறுமியிடம் ஜெயக்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதுகுறித்து வெளியில் சொல்லாத சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகே இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சலிங், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.