Published:Updated:

சென்னை: தனியே வாக்கிங் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டல்! -ஸ்டார் ஹோட்டல் ஊழியர் சிக்கியது எப்படி?

சென்னையில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஊழியர் தினேஷ்குமாரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர் .

சென்னை அண்ணா நகர் 2-வது பிரதான சாலையில், கடந்த 10-ம் தேதி காலை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். முன்னாள் ராணுவ வீரரும் அவரின் ஒரு மகளும் ஒன்றாக சென்றனர். இன்னொரு மகள் 15 மீட்டர் தூரத்தில் ஜாக்கிங் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், தனியாக சென்ற முன்னாள் ராணுவ வீரரின் மகள் அருகில் வந்து, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதனால் அவர், அதிர்ச்சியடைந்ததோடு கூச்சலிட்டார். உடனே பைக்கில் வந்தவர், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். திடீரென மகள் சத்தம் போடுவதைக் கேட்ட ராணுவ வீரரும் அவரின் சகோதரியும் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது, இளம்பெண், தனக்கு நடந்த கொடுமையை கண்ணீர்மல்க கூறினார். அதைக்கேட்டு முன்னாள் ராணுவ வீரர் ஆத்திரமடைந்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

இந்தத் தகவல் அங்கு வாக்கிங் சென்றுக்கொண்டிருந்தவர்களுக்கு தெரிந்ததும் அவர்கள், பைக்கில் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதற்குள் அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு, எஸ்.ஐ செல்லத்துரை, போலீஸார் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது இளம்பெண் தரப்பில் புகார் கொடுக்க முதலில் தயக்கம் காட்டினர். அதன்பிறகு போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகாரை பெற்றனர். பின்னர் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் பதிவு செய்தனர். அப்போது பைக்கில் வரும் நபர், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெளிவாக பதிவாகியிருந்ததது. அவரின் பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்தச் சூழலில் இதைப் போன்ற சம்பவங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்தது அண்ணாநகர் போலீஸாருக்கு தெரியவந்தது. அதனால் இரண்டு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஒரே நபர்தான் தனியாக நடந்துச் செல்லும் பெண்களை குறி வைத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதனால் அந்த நபரைப் பிடிக்க அண்ணாநகர் போலீஸார் வியூகம் அமைத்தனர். அதிகாலை நேரத்தில் சம்பவம் நடந்த அண்ணாநகர் பகுதியில் போலீஸார் மப்டியில் இரண்டு நாள்கள் காத்திருந்தனர். ஆனால் அந்த நபர் வரவில்லை. இந்தச் சமயத்தில் மதியம் நேரத்தில் பைக்கில் வந்த நபர், இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதனால் போலீஸார், அந்த நபரைப் பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்ய முயன்ற இளைஞனை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவனை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image

விசாரணையில் அவனின் பெயர், தினேஷ்குமார் (20) சென்னை வில்லிவாக்கம் ஜெகநாதன் நகர் பகுதியைச சேர்ந்தவன் என்றும் தெரிந்தது. இவன் டெல்லியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறான். தற்போது சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ட்ரெயினிங்காக செல்வது தெரியவந்தது. வீட்டிலிருந்து புல்லட், ஸ்கூட்டி போன்ற பைக்குகளில் அதிகாலை நேரத்தில் எழும்பூருக்கு வரும்போதுதான் தினேஷ்குமார், இந்தச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து மூன்று பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ``கைதான தினேஷ்குமாரின் அப்பா தொழிலதிபராக உள்ளார். டெல்லியில் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், கடந்த ஓராண்டாக இந்தச் செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறான். அவன் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்காததால் அந்தத் தைரியத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறான். அதிகாலை நேரம், மதிய நேரம் என தனியாக செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான்.

`ஆபாச வீடியோ; பாலியல் சீண்டல்!'- நாமக்கல் அரசுப் பள்ளி ஆசிரியர் செயலால் கொதித்த பெற்றோர்
தினேஷ்குமார்
தினேஷ்குமார்

ஏன் இப்படி நடந்துக் கொள்கிறாய் என்று தினேஷ்குமாரிடம் கேட்டபோது உடற்பயிற்சி டிரெஸ் அணிந்து கொண்டு தனியாக செல்லும் பெண்களைப் பார்த்ததும் எனக்குள் ஆசை வந்து அப்படி நடந்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறான். தினேஷ்குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆரம்பத்திலேயே புகாரளித்திருந்தால் மற்ற பெண்கள் பாதிக்கபட்டிருக்க மாட்டார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனே காவல் நிலையத்தில் புகாரளித்தால் அவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு