Published:Updated:

` வீட்டில் நடமாடிய இடத்தில் எல்லாம் மிளகாய்ப் பொடி!' - வடிவேலு பாணியில் சிக்கிய திருடன்

கா.முரளி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில், வடிவேலு பாணியில் மிளகாய்ப் பொடி தூவி திருடிய வாலிபரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சதீஷ்
சதீஷ்

போளூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சிவசாம்பு. இவர் கடலாடி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், திருவண்ணாமலையில் உள்ள தன் மகள் வீட்டில் மனைவியோடு சில நாள்களாகத் தங்கினார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு 10 அளவில் அவர் போளூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டில் ஆள்நடமாட்டம் இருப்பதை உணர்ந்துகொண்டு பொறுமையாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஓர் ஆசாமி முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, வீட்டில் இருந்த டி.வியை தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குச் செல்வதைப் பார்த்த சிவசாம்பு, `திருடன்.. திருடன்' எனச் சத்தம்போட்டு அந்த ஆசாமியைப் பிடிக்க முயன்றுள்ளார்.

கொடநாடு பங்களாவில் கொள்ளை எதற்காக நடந்தது?- குற்றப்பதிவில் போலீஸ் அதிர்ச்சித் தகவல்

சுதாரித்துக்கொண்ட அந்த ஆசாமி, மாடி ஜன்னல் வழியாக கீழே குதித்துத் தப்ப முயன்றுள்ளார். ஆனால், கீழே குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு வேகமாக ஓடமுடியாமல் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார். பொதுமக்கள் அந்த ஆசாமியைப் பிடித்துக் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸ் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் காளசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது.

சிதறிக்கிடக்கும் பொருள்கள்
சிதறிக்கிடக்கும் பொருள்கள்

இதற்கிடையில், சிவசாம்பு வீட்டை போலீஸ் ஆய்வு செய்தபோது, வடிவேல் ஒரு திரைப்படத்தில் மிளகாய்ப் பொடி தூவி திருடும் பாணியில், சதீஷும் சமையல் அறையிலிருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து அடையாளம் கண்டுபிடிக்காத அளவுக்கு வீட்டினுள் அவர் சென்ற இடமெல்லாம் தூவியுள்ளார். வடிவேல் பாணியில் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.