சென்னையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். பின்னர் அவர் தன்னுடைய பைக்கில் வீட்டுக்குச் சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், இளம்பெண்ணிடம் மடிப்பாக்கத்துக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டார். உடனே இளம்பெண்ணும், பைக்கை நிறுத்தி மடிப்பாக்கத்துக்கு செல்வது எப்படி என்பதை விவரமாக இளைஞரிடம் தெரிவித்தார்.

அந்தச் சமயத்தில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லை. இளம்பெண் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென இளைஞர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், பைக்கிலிருந்து கீழே சரிந்து விழுந்தார். அதைப் பார்த்த இளைஞர் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார். இளம்பெண்ணின் சத்தம் கேட்டு வந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிகிச்சைக்குப் பிறகு இளம்பெண், தனக்கு நடந்த கொடுமை குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் பைக்கில் சென்ற இடங்களை சிசிடிவி மூலம் போலீஸார் கண்டறிந்து அவரின் வீட்டுக்கு போலீஸார் சென்றனர்.

பின்னர் இளைஞரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் சந்தோஷ் (22) என்றும், பள்ளிக்காரணையைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர் கட்டட வேலை செய்துவருவதும் தெரிந்தது. சந்தோஷ், தனியாகச் செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பதுபோல நடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு சந்தோஷை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.