சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்துவந்த 13 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் நெருங்கிப் பழகியிருக்கிறார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு சிறுமியை சிறார் வதைசெய்த நபரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தும் வந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து இந்த வழக்கில் 22-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் எதிரிமீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பாகப் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்த வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் குழுவினரை கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.