Published:Updated:

சென்னை: இன்ஸ்ட்ராகிராம் காதல்; காணாமல்போன சிறுமி; போக்சோவில் கைதான இளைஞர்!

போக்சோ
போக்சோ

சென்னையில் இன்ஸ்ட்ராகிராமில் 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய இளைஞர், இரண்டு நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். சிறுமியைத் திருமணம் செய்ததோடு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்துக்காக அந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

சென்னை மாதவரம் காவல் மாவட்டத்தில் குடியிருந்துவரும் 16 வயது சிறுமியை கடந்த 9.8.2021-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர். சிறுமியின் வீடு அமைந்திருக்கும் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியை ஓர் இளைஞர் அழைத்துச் செல்வது தெரியவந்தது.

பாலியல்  தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image

அந்த இளைஞர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர், சிறுமி ஆகியோரைப் பிடித்தனர். இதையடுத்து இருவரையும் செங்குன்றம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார், ``மாயமான சிறுமி ஆன்லைன் மூலம் பாடங்களைக் கற்க அவருக்கு பெற்றோர் செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அந்த செல்போனில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் மாணவி அக்கவுன்ட் தொடங்கியிருக்கிறார். அப்போது இன்ஸ்ட்ராகிராம் மூலம் சிறுமிக்கு தருமபுரி மாவட்டம், பென்னகரம், கொள்ளம்பட்டி, பாளையம்புதூரைச் சேர்ந்த முரளி (23) என்ற இளைஞர் அறிமுகமாகியிருக்கிறார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாகப் பழகிவந்த நிலையில் சிறுமியை முரளி காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கு சிறுமியும் சம்மதித்திருக்கிறார்.

 கைது
கைது
Representational Image
ஆவடி: திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர்! -போக்சோ சட்டத்தில் கைதுசெய்த மகளிர் போலீஸ்

பின்னர் இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசிவந்திருக்கின்றனர். இதையடுத்து சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய முரளி, கடந்த 9.8.2021-ம் தேதி சிறுமியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை. அதனால் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து 11-ம் தேதி சிறுமியை மீட்டிருக்கிறோம். சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முரளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். சிறுமிக்கு கவுன்சலிங் அளித்திருக்கிறோம். இந்த இன்ஸ்ட்ராகிராம் காதல் திருமணம் இரண்டே நாளில் முடிவுக்கு வந்திருக்கிறது’’ என்றனர். ஆன்லைன் வகுப்புக்காகக் குழந்தைகள் செல்போனை பயன்படுத்தும்போது, அதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு