Published:Updated:

மதுரை: மகளிர் கல்லூரியில் இளைஞர்கள் அராஜகம் - அதிர்ச்சி வீடியோ மூலம் காவல்துறை நடவடிக்கை

மதுபோதையில் மகளிர் கல்லூரிக்குள் வந்த இளைஞர்கள்

மகளிர் கல்லூரி வாசலுக்கு வந்த இளைஞர்கள் ஒரு மாணவியின் தந்தையை, பட்டப்பகலில் சுற்றிவளைத்து சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை: மகளிர் கல்லூரியில் இளைஞர்கள் அராஜகம் - அதிர்ச்சி வீடியோ மூலம் காவல்துறை நடவடிக்கை

மகளிர் கல்லூரி வாசலுக்கு வந்த இளைஞர்கள் ஒரு மாணவியின் தந்தையை, பட்டப்பகலில் சுற்றிவளைத்து சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மதுபோதையில் மகளிர் கல்லூரிக்குள் வந்த இளைஞர்கள்

மதுரையிலுள்ள இரண்டு மகளிர் கல்லூரிகளில் இளைஞர்கள் சிலர் செய்த வன்முறைச் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன. இந்த நிலையில், மாநகர காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கடந்த 30-ம் தேதி தேவர் ஜயந்தியன்று மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர்சிலைக்கு மரியாதை செலுத்த அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வந்திருந்தனர். எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.

தனியார் மகளிர் கல்லூரி வாசல் முன் கும்பல்
தனியார் மகளிர் கல்லூரி வாசல் முன் கும்பல்

அதையும் மீறி நரிமேடு பகுதியில் இளைஞர் கூட்டம் ஒன்று இரண்டு சக்கர வாகனத்தில் சத்தமிட்டபடி ரைடு வந்தனர். அப்படியே அருகிலுள்ள தனியார் மகளிர் கல்லூரிக்குள் கூச்சலிட்டபடி நுழைந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுதி மாணவிகள் கல்லூரி வாசலிலும், வளாகத்திலும் நின்று பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அத்துமீறு உள்ளே நுழைந்த அந்தக் கும்பல் மாணவிகளைத் தகாத வார்த்தைகளில் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து, மாணவிகளும் அலறிக்கொண்டே ஓடியிருக்கின்றனர். அந்தக் கும்பலைத் தடுத்து நிறுத்திய செக்யூரிட்டியையும் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் செய்தால், மாணவிகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்று கல்லூரி நிர்வாகம் ஆலோசித்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களே இந்த அட்ராசிட்டி வீடியோவை சமூக ஊடகத்தில் பெருமையாக வெளியிட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் நடந்தது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் சிலர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் மாநகர காவல்துறை ஆணையர் கவனத்துக்குச் சென்றதும், இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அலறி ஓடும் மாணவிகள்
அலறி ஓடும் மாணவிகள்

அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை, கல்லூரி நிர்வாகத்திடம் புகார் பெற்று சமூக ஊடகத்தில் வந்த வீடியோவையும், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வுசெய்து சம்பந்தப்பட்ட 10 பேரைக் கைதுசெய்தது. இவர்கள் அனைவரும் மதுரை புறநகர் பகுதி கல்லூரி மாணவர்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும், போலீஸார் சிலரைத் தேடிவருகிறார்கள்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் அதிலிருந்து மீள்வதற்குள், கடந்த 3-ம் தேதி நடந்த மற்றொரு சம்பவம் மேலும் பீதியை ஏற்படுத்தியது.

கோரிப்பாளையம் அருகேயுள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைந்துள்ள சாலையில் மருத்துவமனையிலிருந்து கிளம்பிய அமரர் ஊர்தி சென்றுகொண்டிருந்தது. அதன் முன்பாக இளைஞர்கள் சிலர் மதுபோதையில் ஆடிக்கொண்டும், கோஷமிட்டபடி இரண்டு சக்கர வாகனத்தில் ரேஸ் செய்தும், விடாமல் ஹார்ன் அடித்துக்கொண்டும் மக்கள் அச்சப்படும் வகையில் சென்றுகொண்டிருந்தனர்.

தனியார் மகளிர் கல்லூரிக்குள் நுழையும் கும்பல்
தனியார் மகளிர் கல்லூரிக்குள் நுழையும் கும்பல்

அந்த நேரம் அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் மகளை அழைத்துச் செல்ல வந்தவர், இரண்டு சக்கர வாகனத்தில் சத்தமிட்டு செல்பவர்களைப் பார்த்து "ஏம்ப்பா இப்படி பண்றீங்க" என்று தன்மையாகக் கேட்டிருக்கிறார்.

உடனே இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்த அந்த இளைஞர் கும்பல் அவர் மகள் கண் முன்பே ஹெல்மெட்டை வைத்து சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். அது மட்டுமின்றி, கல்லூரிக்குள் அவர்கள் நுழைய முயன்றதால் மாணவிகள் அலறி ஓடியிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து வாசலை செக்யூரிட்டி மூடியிருக்கிறார். அதன் பின்பு பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கொடுத்த புகாரில் செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து சம்பந்தப்பட்டவர்களில் ஆறு பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

தாக்கப்படும் மாணவியின் தந்தை
தாக்கப்படும் மாணவியின் தந்தை

மேலும் மற்றவர்களைத் தேடிவருகிறார்கள். இந்தச் சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி, மக்களை பதற்றமடைய வைத்திருக்கிறது.