Published:Updated:

கால்மேல் கால் போட்டு பாட்டுக் கேட்டார்!- போதை நபரால் தேனி இளைஞருக்கு நேர்ந்த சோகம்

தேனி அருகே, கால் மேல் கால் போட்டு அமர்ந்து இளைஞர் ஒருவர் பாட்டுக் கேட்டதால், அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sundhar
Sundhar

தேனி அருகே உள்ளது கோடாங்கிபட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயதாகும் இளைஞர் சுந்தர், தனது வீட்டு வாசலில் அமர்ந்து பாட்டுக் கேட்டுள்ளார். கால் மேல் கால் போட்டு அமர்ந்து பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த சுந்தரிடம், அப்பகுதியைக் கடந்து சென்ற கோழிக்கடை கண்ணன், மது போதையில் தகராறு செய்துள்ளார். "என் முன்னால், கால் மேல் கால் போட்டு எப்படி பாட்டுக் கேட்கலாம்" என்று ஆத்திரத்துடன் பேசிய கண்ணன், தன்னிடம் வைத்திருந்த அரிவாளை எடுத்து சுந்தரின் தலையில் வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே சரிந்த சுந்தரை அப்பகுதி மக்கள் மீட்டு தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கால் மேல் கால்போட்டு பாட்டுக் கேட்டதால், இளைஞர் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sundhar
Sundhar

தகவல் அறிந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கண்ணன் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீஸார் கூறும் போது, ``உடனடியாக சுந்தர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்ணனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்யப்படுவார்" என்றனர்.