Published:Updated:

`சாதிப் பெயரைச் சொல்லி அடிச்சு துன்புறுத்துனாங்க!’ - சேலம் இளைஞர் தற்கொலையில் நடந்தது என்ன?

மோகன்ராஜ் உயிரிழப்பதற்கு முன்னதாக அவர் எழுதிய உருக்கமான இரண்டு பக்கக் கடிதம் ஒன்று போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தட்டாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (32). ஐ.டி.ஐ படித்துள்ள மோகன்ராஜ், வெப்படை பகுதியிலுள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்துவருகிறார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து, திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்குப் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், மோகன்ராஜுக்கும் முதல் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்ததோடு, விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

உயிரிழந்த மோகன்ராஜ்
உயிரிழந்த மோகன்ராஜ்

மோகன்ராஜுக்கு அவருடன் நூற்பாலையில் வேலை பார்த்துவந்த சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சேர்ந்த விஜித்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 12-ம் தேதி பெற்றோர் சம்மதமின்றி, வீட்டைவிட்டு வெளியேறி சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளனர். விஜித்திராவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் தாரமங்கலம் போலீஸார், மோகன்ராஜ், விஜித்திரா இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மோகன்ராஜிடமிருந்து விஜித்திராவைப் பிரித்து, அவருடைய பெற்றோருடன் போலீஸார் அனுப்பிவைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் மோகன்ராஜ் கடுமையான மன உளைச்சலில் இருந்துவந்திருக்கிறார்.

கடந்த 15-ம் தேதி இரவு வீட்டிலிருந்து கிளம்பிய மோகன்ராஜ், நள்ளிரவில் சங்ககிரி மாவெலிபாளையம் ரயில்வே தடத்தில் உடல் சிதறிய நிலையில் பிணமாகக் கிடந்திருக்கிறார். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு ரயில்வே போலீஸார், மோகன்ராஜின் சடலத்தைக் கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மோகன்ராஜின் இறப்பு குறிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

ஈரோடு: மாயமான 2-வது மகள்: 9 வயது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்!

மோகன்ராஜ் உயிரிழப்பதற்கு முன்னதாக அவர் எழுதிய உருக்கமான இரண்டு பக்கக் கடிதம் ஒன்று போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது. அதில், ``விஜித்திராவும் நானும் காதலித்துவந்தோம். எங்களுடைய காதலுக்கு விஜித்திரா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. மாறாக விஜித்திராவுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்ய ஆரம்பித்தனர். ‘நீ வந்து என்னைக் கூட்டிச் செல்லவில்லையென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என விஜித்திரா சொன்னதால் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டோம். விஜித்திராவின் வீட்டில் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து என்னையும் விஜித்திராவையும் பிரித்துவிட்டனர். ஸ்டேஷனில் சாதிப் பெயரைச் சொல்லி என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால்தான் நான் தற்கொலை செய்துகொண்டேன். எனது தற்கொலைக்கு விஜித்திராவின் அக்கா கோகிலா, பானுமதி, பானுமதியின் கணவர் ஆகியோர்தான் காரணம்’ என எழுதியிருக்கிறார்.

பிணவறை
பிணவறை

`சாதிவெறி ஆணவத்தால்தான் மோகன்ராஜ் தற்கொலை செய்துகொண்இருக்கிறார். உண்மையிலேயே மோகன்ராஜுக்கு என்ன நடந்தது என போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும். மேலும், காவல் நிலையத்தில்வைத்தே மோகன்ராஜின் சாதிப் பெயரைச் சொல்லி, அடித்து துன்புறுத்தியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள், போலீஸார் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மோகன்ராஜுக்கு ஆதரவாக சமூக அமைப்புகள் குரல் கொடுத்துவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு