சென்னை: சௌகார்பேட்டை 3 பேர் துப்பாக்கிச்சூடு வழக்கு... விசாரணை வளையத்திலிருந்தவர் திடீர் தற்கொலை!

சென்னை சௌகார்பேட்டையில் மூன்று பேரைத் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் விசாரணை வளையத்திலிருந்தவர் தற்கொலை செயதுகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை சௌகார்பேட்டை, விநாய மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் ஃபைனான்ஸியர் தலில்சந்த். அவர், அவரின் மனைவி புஷ்பா பாய், மகன் சீத்தல்குமார் ஆகியோர் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, அவரின் சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் உட்பட ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர். துப்பாக்கி, கார் கொடுத்ததற்காக ராணுவ அதிகாரி ராஜீவ் துபே கைதுசெய்யப்பட்டார். கைதான ஜெயமாலா மற்றும் சகோதரர்கள் கைலாஷ், விலாஸ் ஆகியோர், சீத்தல் குமார் குடும்பத்தின் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கைதான ஜெயமாலா, தனக்குப் பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்ததாகக் கூறியதால் சீத்தல் குமாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சீத்தல் குமாரின் குடும்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்திருந்தனர். போலீஸாரின் விசாரணை வளையத்திலிருந்த விஜயகுமார் இன்று காலை, ஆர்.கே.நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துத் தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விஜயகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விஜயகுமாரின் செல்போனில் அவர் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துவைத்திருந்தார். அதில், `என்னுடைய பெயர் விஜயகுமார். நான், கொலை செய்யப்பட்ட சீத்தல் குமாரின் உறவினர். என்னுடைய உறவினர்கள் மூன்று பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சோகத்தில் நானும் என்னுடைய உறவினர்களும் இருந்துவருகிறோம். ஆனால், இந்த வழக்கில் கைதானவர்கள் கொடுத்த தகவலின்படி என்னையும், உறவினர் ஹேமந்த் என்பவரையும் போலீஸார் அடிக்கடி விசாரணை செய்ததால் நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம். ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எங்களுக்கு உதவ வேண்டும். நானும், என் குடும்பத்திலுள்ள குழந்தைகளும் விசாரணைக்கு பயந்து, ஒழுங்காகச் சாப்பிடக்கூட முடியாத வேதனையில் இருக்கிறோம்’ எனப் பேசியிருந்தார்.

அந்த வீடியோ அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தலில்சந்த் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துப் பிரச்னைக்காகக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு கைதானவர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். தற்போது போலீஸ் விசாரணையால் மன உளைச்சலடைந்த தலித் சந்த் உறவினர் விஜயகுமார், தான் குடியிருந்த அடுக்குமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். மூன்று பேர் சுட்டுக் கொலைப்பட்ட சம்பவம் அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்திவருகிறது.