Election bannerElection banner
Published:Updated:

`வேப்பமரம்; தாயின் சேலை!' -குடும்பச் சண்டையால் தற்கொலை முடிவை நாடிய கரூர் பட்டதாரி

மணிகண்டன்
மணிகண்டன்

மணிகண்டனுக்கும் அவரின் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் என்கின்றனர் உறவினர்கள். இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகமாகி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மணிகண்டன் குடும்பம் வருமானமின்றித் தவித்திருக்கிறது.

கரூர் லாலாப்பேட்டை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, வெட்டவெளியில் வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய பொறியியல் பட்டதாரி இளைஞரின் செயலால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

தற்கொலை
தற்கொலை
மாதிரிப் படம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே இருக்கிறது, கோவக்குளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், மணிகண்டன் ( வயது 27). இவருக்குத் திருமணமாகி, மூன்று வருடங்களாகின்றன. இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு முன்புவரை வெளிநாட்டில் வேலை செய்து வந்த மணிகண்டன், திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால், மணிகண்டனுக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் என்கின்றனர் உறவினர்கள். இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகமாகி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மணிகண்டன் குடும்பம் வருமானமின்றித் தவித்திருக்கிறது.

`கடும் மனஅழுத்தம்; கைகொடுக்காத சிகிச்சை?!’ - 34 வயதில் விபரீத முடிவெடுத்த நடிகர் சுஷாந்த் சிங்

இதனால், மணிகண்டனிடம், அவரின் மனைவி, `வேலைக்குப் போகாமல் எப்படி காலத்தை தள்ளுறது... வருமானமில்லாமல் குடும்பத்தை ஓட்டுறதே சிரமமா இருக்குது. என்னை ஏன் கல்யாணம் பண்ணுனீங்க?' என்று சண்டை போட்டுள்ளார். இதை வைத்து, கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு நேற்று மாலை வெளியே சென்றிருக்கிறார். இரவு நெருங்கியும் அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இன்று காலை, கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே உள்ள மகிளிபட்டி இரட்டை வாய்க்கால் கரையில் உள்ள வேப்பமரம் ஒன்றில், மணிகண்டன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் இருந்துள்ளதைப் பார்த்த சிலர், அதிர்ந்துபோயுள்ளனர். தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, வீட்டில் இருந்து கொண்டுவந்த தன் தாயின் சேலையை மரத்தில் கட்டி, அதைக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்தார், மணிகண்டன். அப்பகுதியில் சென்றவர்கள், உயிர் பிரிந்த நிலையில் மரத்தில் தொங்கிய மணிகண்டன் குறித்து, லாலாப்பேட்டை காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

தூக்கில் தொங்கிய மணிகண்டன்
தூக்கில் தொங்கிய மணிகண்டன்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மணிகண்டன் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், தன் கணவர் இறந்ததைப் பார்த்து, அவரது உடலை கட்டிப்பிடித்துக்கொண்டு அவரின் மனைவி, ``எங்களை தவிக்கவிட்டுட்டுப் போக எப்படி மனசு வந்தது... நீங்க இப்படி செய்வீங்கனு தெரிஞ்சுருந்தா, நான் சண்டையே போட்டிருக்கமாட்டேனே. ரெண்டு குழந்தைகளையும் கண் திறந்து பாருங்க. இனி எங்களுக்கு யாரு இருக்கா?" என்று கதறிய காட்சி, அங்குள்ளவர்களைக் கண்கலங்க வைத்தது.

குடும்பப் பிரச்னையில் பொறியியல் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், லாலாபேட்டைப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு