Published:Updated:

`மாமா என்று அழைத்தால் கடன் கொடுப்பார்!’ -மீஞ்சூர் இளைஞர் மரணத்துக்குப்பின் வெளிவந்த அதிர்ச்சி வீடியோ

தற்கொலை செய்த சரத்குமார்
தற்கொலை செய்த சரத்குமார்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் கறிக்கடையில் வேலை செய்த சரத்குமார் தற்கொலை செய்துகொண்டார். அவரின் செல்போனில் இருந்த மரண வாக்குமூல வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எண்ணூர் சத்தியமூர்த்தி நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகிறேன். என் தம்பி சரத்குமார் (27) என்பவர் மீஞ்சூர் பஜாரில் உள்ள கறிக்கடையில் கூலி வேலை செய்து வந்தான். எனது தம்பி மஞ்சுளா என்ற பெண்ணைக் காதல் திருமணம் செய்தான். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

சரத்குமார்
சரத்குமார்
``என் கணவர் இறந்துவிட்டார், அய்யா உதவி செய்யுங்கள்"- கண் தெரியாத சென்னை மூதாட்டியின் கண்ணீர்க் கதை

இந்தநிலையில் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மஞ்சுளா, தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது தாய் வீடான மீஞ்சூர் காலனிக்குச் சென்றுவிட்டார். எனது தம்பி மீஞ்சூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்தான். கடந்த 6.5.2020-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் என் தம்பி எனக்கு போன் செய்து என்னை சாப்பீட்டீர்களா என்று விசாரித்தான்.

7.5.2020-ம் தேதி காலை நான் என் தம்பிக்கு போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் என் தம்பி வேலைபார்த்த கறிக்கடையின் ஓனருக்கு போன் செய்து தகவலைத் தெரிவித்தேன். தம்பியின் ஓனர், வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவு உள்பக்கமாகப் பூட்டு போடப்பட்டுள்ளது என்று கூறினார். பின்னர் நான் அங்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான் சரத்குமார்.

சரத்குமாரின் மனைவி
சரத்குமாரின் மனைவி

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று என் தம்பியின் சடலத்தை இறக்கி அவரை ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அங்கு சரத்குமார் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என் தம்பியின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்ய வேண்டியுள்ளதால் சடலத்தைத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சமபவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குபதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சரத்குமார், இறப்பதற்கு முன் தன்னுடைய செல்போனில் மரண வாக்குமூலமாக 4 வீடியோக்களைப் பதிவு செய்துவைத்தது தெரியவந்துள்ளது.

அந்த வீடியோவில் ``என் பெயர்தான் குட்டி (சரத்குமார்). சொந்த ஊர் எண்ணூர். நான் மீஞ்சூரில் லவ் மேரேஜ் பண்ணி 8 ஆண்டுகளாகிறது. வறுமையின் காரணமாக முன்னாள் கவுன்சிலர் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தேன். அவர், என் மனைவியிடம் போனில் பேசிவந்துள்ளார். அதன்பிறகு முன்னாள் கவுன்சிலர் எனக்கு பலவகையில் டார்ச்சர் கொடுத்தார்" என்பதோடு முதல் வீடியோ முடிவடைகிறது.

சரத்குமார்
சரத்குமார்

2-வது வீடியோவில், ``முழுக்க, முழுக்க என்னுடைய சாவுக்கு முன்னாள் கவுன்சிலரும் அவரின் குடும்பத்தினரும்தான் காரணம் "என்பதோடு முடிவடைகிறது. 3-வது வீடியோவில் ``முன்னாள் கவுன்சிலரை நீங்கள் எங்கும் தேட வேண்டாம். அவரின் செல்போன் நம்பரைச் சொல்கிறேன்" என்று சரத்குமார் கூறுகிறார்.

4-வது வீடியோவில் சரத்குமார் அதிர்ச்சி தகவல் ஒன்றைக் குறிப்பிடுகிறார். அதில் கூறியிருப்பதாவது, ``கணவன், மனைவி என இரண்டு பேரும் சேர்ந்து போய்தான் ஃபைனான்ஸ் வாங்க முடியும். புருஷன் பணத்தைக் கட்டவில்லை என்றால் மனைவி கட்ட வேண்டும் என்பது முன்னாள் கவுன்சிலரின் ரூல்ஸ். மேலும், ஃபைனான்ஸ் வாங்க வேண்டும் என்றால் செல்போன் நம்பரைக் கொடுக்க வேண்டும். மனைவியும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டும். நான் கடன் வாங்கும்போது என்னிடம் செல்போன் கிடையாது. வீட்டில் மட்டும்தான் செல்போன் இருந்தது. அந்த நம்பரைக் கொடுத்துவிட்டு கடன் வாங்கி வந்தோம்.

செல்போன்
செல்போன்
மாதிரிப் படம்

நான் காலையில் வேலைக்குச் சென்றால் இரவுதான் வருவேன். இந்தச் சமயத்தில் அந்த செல்போனில் என் மனைவியிடம் முன்னாள் கவுன்சிலர் பேசிவந்துள்ளார். ஒருகட்டத்தில் தன்னை மாமா என்று அழைத்தால்தான் எனக்குக் கடன் கொடுப்பதாக முன்னாள் கவுன்சிலர் கூறியுள்ளார். வேறுவழியில்லாமல் என் மனைவியும் மாமா என்று கூறியிருக்கிறார். இப்படியே பேசிப் பேசி என் மனைவியை என்னைவிட்டுப் பிரித்துவிட்டனர். பொன்னேரி மகளிர் காவல் நிலையத்திலும் என் மீது மனைவி மூலம் புகாரளிக்க வைத்துவிட்டனர்" என்று கண்ணீர்மல்கப் பேசியுள்ளார்.

சரத்குமாரின் வீடியோ அடிப்படையில் மீஞ்சூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தற்கொலை செய்து இறுதி அஞ்சலிக்குப் பிறகு சரத்குமாரின் வீடியோ பதிவைக் கேட்டு அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சரத்குமாரின் மனைவி மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீஞ்சூர் போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு