விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள சூரப்பட்டைச் சேர்ந்தவர் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ம் தேதி இரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னதாக, 21-ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரும் இவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதில், இரண்டு தரப்பினரும் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், இரு தரப்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் கெடார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், இளைஞர் ராஜா தற்கொலை செய்துகொண்டதுக்கு மூர்த்தியுடனான பிரச்னையே காரணம் எனக் கூறி இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா தலைமையிலான காவல்துறையினர், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தனர். அதன் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜாவை தற்கொலைக்கு தூண்டியது, சாதி பெயரை சொல்லி திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த கெடார் போலீஸார்... மூர்த்தி, மோகன் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ராஜாவின் பெற்றோர் நேற்று வரையில் உடலை வாங்க மறுத்து வந்தனர்.
இதனிடையே, விழுப்புரம் இந்திரா நகரைச் சேர்ந்த திருநங்கை ராணி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், கடந்த 25-ம் தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்தபோது, திடுக்கிடும் பின்னணி தெரியவந்திருக்கிறது. இந்த திருநங்கை ராணியும், உயிரிழந்த ராஜாவும் சில வருடங்களாக பழகி வந்திருக்கின்றனர். ராணியை, ராஜா திருமணம் செய்து கொள்வதாகக் கூறினாராம். எனவே, ராணி அண்மையில்தான் பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம்.

திருநங்கையுடன் தன் மகன் பழகும் விவகாரம் ராஜா வீட்டுக்கு தெரியவந்திருக்கிறது. மேலும், சேலம் பகுதியிலும் திருநங்கை ஒருவருடன் ராஜா ஏற்கெனவே பழகியிருந்தாராம். அந்த காரணத்தையும் உள்ளடக்கி, ராஜாவை அவரின் பெற்றோர் கடுமையாக கண்டித்ததாகவும், அவரின் செல்போனை பறித்து வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராஜா தற்கொலை செய்துகொண்டதாகவும், ராஜாவின் பிரிவை தாங்காமல், திருநங்கை தன் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் மற்றொரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. முதலில், இருதரப்பு மோதலே ராஜாவின் மரணத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக திருநங்கையுடனான தொடர்பை பெற்றோர் கண்டித்ததாலேயே ராஜா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணியின் போனை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜாவின் போனை அவரின் பெற்றோர் காவல்துறையிடம் தருவதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், ராஜாவின் இறப்புக்கு நிவாரணம் கேட்டு பெற்றோர் தரப்பினர், நேற்று வரை உடலை வாங்காமல் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில், ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம், அரசின் இலவச வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ராஜா-வின் உடலை அவரின் பெற்றோர் பெற்றுக் கொண்டனர். மேலும், ராஜா-வின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.