Published:Updated:

சென்னை: `உன்னை லவ் பண்றேன்!' - ஒருதலைக் காதலால் கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்

தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஜீவானந்தம்
தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஜீவானந்தம்

சென்னையில் கல்லூரி மாணவியை ஒருதலையாகக் காதலித்த மாணவன், மாணவி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

சென்னை, வளசரவாக்கம் அன்பு நகரிலிருந்து இன்று அதிகாலை வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், ``சார், எங்களைக் குடும்பத்தோடு இளைஞர் ஒருவர் தீவைத்து கொளுத்தப் பார்க்கிறார். எங்களைக் காப்பாற்றுங்கள்'' என்று பதறியபபடி கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, போன் கால் வந்த பகுதியில் ரத்த வெள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தார். அதைப் பார்த்த போலீஸார், என்னவென்று விசாரித்தனர். இதற்கிடையில் போனில் பேசிய பெண்ணின் வீடு பூட்டப்பட்டிருந்தது. அதைத் திறந்துகொண்டு உள்ளே சென்றபோது வீடு முழுவதும் காஸ் வாசனை பரவியிருந்தது. வீட்டுக்குள் இருந்தவர்களை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.

தீ
தீ
Representational Image

இதற்கிடையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மீட்டு போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், இளைஞர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, போலீஸார் யார் அந்த இளைஞர் என்று போனில் பேசிய பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வளசரவக்கத்தில் குடியிருக்கும் அந்தக் குடும்பத்தினரின் 21 வயதாகும் மகள் கல்லூரியில் படித்துவருகிறார். சமீபத்தில், குஜராத்தில் நடந்த விழாவில் அந்த மாணவி பங்கேற்றிருக்கிறார். அப்போது அந்த விழாவுக்கு அரியலூரைச் சேர்ந்த ஜீவானந்தம் (22) என்ற கல்லூரி மாணவரும் சென்றிருக்கிறார். அப்போதுதான் மாணவிக்கும் ஜீவானந்தத்துக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் செல்போன் நம்பர்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். பின்னர் இருவரும் நட்பாகப் பேசிவந்திருக்கிறார்கள். ஆனால், மாணவன் ஜீவானந்தம், அந்த மாணவியை ஒருதலையாகக் காதலித்திருக்கிறார். கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் ஜீவானந்தம், வேலை தேடிச் சென்னைக்கு வந்ததாகவும், தங்க இடமில்லை என்றும் மாணவியிடம் கூறியிருக்கிறார். பின்னர், வளசரவாக்கத்திலுள்ள மாணவியின் வீட்டுக்குச் சென்று, அங்கேயே தங்கியிருக்கிறார்.

தீ
தீ
representational image

மகளின் நண்பர் என்ற முறையில் ஜீவானந்தத்தை வீட்டில் தங்க மாணவியின் பெற்றோர் அனுமதித்திருக்கிறார்கள். இன்று அதிகாலையில் மாணவிக்கு குட்மார்னிங் கூறிய ஜீவானந்தம், `நீ யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது' என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு மாணவி அதிர்ச்சியடைந்திருக்கிறார். அடுத்து, `உன்னை நான் லவ் பண்றேன். உன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்' என்று ஜீவானந்தம் கூறியிருக்கிறார். அதற்கு மாணவி, `ஜீவா என்ன பேசுகிறாய்?' என்று கேட்டிருக்கிறார்.

 சென்னை: `உன் பெற்றோரிடம் சொல்லட்டுமா?'- மாணவியின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

`நீ என்னை மேரேஜ் செய்துகொள்ளவில்லையென்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று ஜீவானந்தம் கூறியிருக்கிறார். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்த ஜீவானந்தம், வீட்டின் சமையலறையிலிருந்து காஸ் சிலிண்டரைத் தூக்கிக்கொண்டு பெட் ரூமுக்கு வந்திருக்கிறார். அங்கே மாணவியின் பெற்றோர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். சிலிண்டரைத் திறந்த ஜீவானந்தம், லைட்டர் மூலம் தீயைக் கொளுத்தியிருக்கிறார். அப்போது தீப்பிடித்திருக்கிறது. அதைப் பார்த்து மாணவி அதிர்ச்சியடைந்திருக்கிறார். இந்தச் சத்தம் கேட்டு மாணவியின் பெற்றோர் கண்விழித்திருக்கிறார்கள்.

சென்னை: `பள்ளி மாணவிமீது ஒருதலைக் காதல்; பெண் தொழிலதிபருக்கு வந்த அதிர்ச்சி வீடியோ' - சிக்கிய மாணவன்
காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்
Representational Image

மாணவியின் பெற்றோர், ஜீவானந்தத்தைப் பார்த்து, `என்ன செய்கிறாய்?' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்குள் மூன்று பேரையும் பெட்ரூமில்வைத்துப் பூட்ட முயன்ற ஜீவானந்தம், சிலிண்டரையும் திறந்துவிட்டிருக்கிறார். விபரீதத்தை உணர்ந்த மாணவியின் அப்பா, ஜீவானந்தத்தை அறையிலிருந்து வெளியில் தள்ளிவிட்டிருக்கிறார். அதனால், ஆத்திரமடைந்த ஜீவானந்தம், தெருவில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து, தன் கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த மாணவியும் அவரின் பெற்றோரும் சத்தம் போட்டிருக்கிறார்கள். பின்னர்தான் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். மாணவியின் அப்பா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். மாணவன் ஜீவானந்தம் மரணம் குறித்து அவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறோம்" என்றனர்.

ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவன் ஜீவானந்தம் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு