Published:Updated:

`காதல் தோல்வி; கஞ்சா போதை!' -சட்டப்பேரவை செயலரின் காரை சேதப்படுத்திய சென்னை இளைஞர்கள்

தினேஷ்குமார்
தினேஷ்குமார்

காதல் தோல்வியால் கஞ்சா போதையில் நண்பனுடன் டூவீலரில் சென்ற தினேஷ்குமாரை உரசியபடி சொகுசுக் கார் ஒன்று சென்றது. இதனால் அவர் ஆத்திரமடைந்தார்.

சென்னை வியாசர்பாடி அண்ணாசாலை பகுதியில் சொகுசுக் கார்கள் முதல் டூவீலர்கள் வரை அண்மையில் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அதிகாலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், ஏட்டு உதயராஜ் ஆகியோர் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது டூவீலரில் செல்லும் 2 இளைஞர்கள் கார்களின் கண்ணாடிகளையும் டூவீலர்களையும் சேதப்படுத்தும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தன. டூவீலரின் பதிவு நம்பரைக்கொண்டு போலீஸார் விசாரணை நடத்த ஒரு வீட்டுக்குச் சென்றனர். அங்கு விசாரித்தபோது அது போலி முகவரி என்றும் அதைக் காட்டி டூவீலர் வாங்கியதும் தெரியவந்தது.

டூவீலர்
டூவீலர்
காதல் தோல்வி; விரக்தி; துப்பாக்கிச்சூடு! - டெல்லியில் தேர்தலுக்குமுன் கொல்லப்பட்ட பெண் எஸ்.ஐ

இதனால் சோர்ந்து போகாத போலீஸார், கார்களை சேதப்படுத்திய இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்திவந்தனர். இந்தச் சூழலில் முல்லைநகர் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக கார்களை சேதப்படுத்திய வழக்கில் தேடப்படும் டூவீலரில் இளைஞர் ஒருவர் வந்தார். அவரைப் பிடித்த போலீஸார், `எதற்காக கார்களை சேதப்படுத்தினாய்?' என்று விசாரித்தனர். அப்போது அவர், `நான் எந்தக் கார்களையும் சேதப்படுத்தவில்லை' என்று கூறினார்.

கஞ்சா போதை

இதையடுத்து அவருக்கு சிசிடிவி கேமரா வீடியோக்களை போலீஸார் காண்பித்தனர். அதைப் பார்த்ததும் அந்த இளைஞர், `சார் இது என்னுடைய டூவீலர்தான். ஆனால் அந்த வாகனத்தில் செல்வது என்னுடைய தம்பி தினேஷ்குமார், அவரின் நண்பன் சூர்யா' எனக் கூறினார். இதையடுத்து போலீஸார் தினேஷ்குமாரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது கார்களை சேதப்படுத்தியதற்கான காரணம் தெரியவந்தது.

சேதப்படுத்தப்பட்ட கார்
சேதப்படுத்தப்பட்ட கார்
`மனைவி மீது சந்தேகம்; குடும்பத்துக்கே தீ வைத்த ஊழியர்’ -சென்னையில் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``கடந்த 14-ம் தேதி அதிகாலை நேரத்தில் தினேஷ்குமாரும் அவரின் நண்பர் சூர்யாவும் டூவீலரில் வியாசர்பாடி பகுதியில் சென்றுள்ளனர். இருவரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அப்போது, சொகுசுக் கார் ஒன்று டூவீலரை உரசியபடி சென்றுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமாரும், சூர்யாவும் அந்தக் காரை விரட்டிச் சென்றுள்ளனர். ஆனால் கார் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. ஆனாலும் காரை விடாமல் துரத்திய இருவரும் வியாசர்பாடியில் கார் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளனர்.

காதல் தோல்வி

அந்தக் காரின் கண்ணாடிகளை கற்களைக்கொண்டு வீசி உடைத்த இருவரும் டூவீலரில் அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் போதை தலைக்கேறியதால் அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 9 கார்கள், 2 டூவீலர்கள் ஆகியவற்றையும் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் இருவரும் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வியாசர்பாடி அண்ணாசாலை மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் மாரிமுத்து, எம்.கே.பிநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் தினேஷ்குமாரைக் கைது செய்துள்ளோம். அவரின் நண்பரான சூர்யாவைத் தேடிவருகிறோம். கைது செய்யப்பட்ட தினேஷ்குமார் வியாசர்பாடியைச் சேர்ந்தவர்" என்றார்.

`கொரோனாவால் மாமா; அதிர்ச்சியில் அக்கா!’ - அடுத்தடுத்த மரணங்களால் சென்னைக் குடும்ப சோகம்
விசாரணை நடத்தும் உதவி கமிஷனர் அரிக்குமார்
விசாரணை நடத்தும் உதவி கமிஷனர் அரிக்குமார்

போலீஸ் விசாரணையில் தினேஷ்குமார், ``நான் கல்லூரியில் படிக்கும்போது காதலித்தேன். ஆனால் அந்தப் பெண் என்னைக் காதலிக்கவில்லை. காரில் வரும் அவளை டூவீலரில் பல தடவை விரட்டிச் சென்றுள்ளேன். காதல் தோல்வியால் மனவிரக்தியிலிருந்த நானும் என் நண்பன் சூர்யாவும் கஞ்சா போதையிலிருந்தோம். அப்போதுதான் கார் ஒன்று எங்களை உரசிவிட்டுச் செல்வது போல வேகமாகச் சென்றது.

பின்னால் அமர்ந்திருந்த சூர்யா என்னை உசுப்பேத்தினான். ஏற்கெனவே காதல் தோல்வியிலிருந்த நான், அந்தக் காரை விரட்டிச்சென்றேன். போதையிலிருந்த நானும் சூர்யாவும் காரின் கண்ணாடியை உடைத்தோம். அப்போதுதான் அது அரசு வாகனம் எனத் தெரிந்தது. உடனே அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் டூவீலர்களையும் சேதப்படுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றோம்" என்று கூறியுள்ளார்.

சட்டபேரவைச் செயலாளர்

எம்.கே.பி.நகர் காவல்நிலையத்தில் டிரைவர் மாரிமுத்து அளித்த புகாரில், `நான் கடந்த 18 ஆண்டுகளாக தமிழக சட்டப் பேரவையின் வாகனங்களுக்கு ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறேன். தற்போது, நான் சட்டப்பேரவை செயலாளரின் காருக்கு ஓட்டுநராக உள்ளேன். பணி முடிந்ததும் பாதுகாப்புக் கருதி அரசு வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைப்பேன்.

கடந்த 14-ம் தேதி அதிகாலை 2.50 மணியளவில் காரின் மீது யாரோ கற்களை வீசும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தேன். அப்போது பின்பக்கக் கதவின் இடதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. எனவே அரசு வாகனத்தின் கார் கண்ணாடியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

`டெலிவரி பாய், கஞ்சா விற்றது ஏன்?' -டோர் டெலிவரி செய்தபோது சிக்கிய பின்னணி

போலீஸார் கூறுகையில் ``மாரிமுத்து வீட்டின்முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்த போதை இளைஞர்கள், பின்னர் சஞ்சய் நகர் பகுதியில் குடியிருக்கும் வழக்கறிஞர் செல்வம் என்பவரின் கார் கண்ணாடியைச் சேதப்படுத்தியுள்ளனர். அடுத்து கே.கே நகர் தெருவில் இரண்டு இருசக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து பெரம்பூர், செம்பியம் பகுதிகளில் கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஒரேநாளில் அந்தப் பகுதியில் உள்ள 10 கார் மற்றும் 2 இரு சக்கரவாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக எம்கேபி நகர் காவல் நிலையம் மற்றும் செம்பியம் காவல்நிலையம் ஆகியவற்றில் புகார்கள் வந்தன. அதன்பேரில் விசாரணை நடத்தி தினேஷ்குமார் என்பவரைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.

கொரோனா ஊரடங்கிலும் கார்கள், டூவீலர்கள் சேதப்படுத்திய வழக்கை திறம்பட துப்பு துலக்கிய உதவி கமிஷனர் அரிக்குமாரின் ஸ்பெஷல் டீமை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.

அடுத்த கட்டுரைக்கு