Published:Updated:

திருவண்ணாமலை: துரத்திய போலீஸ்; தப்பி ஓடிய இளைஞன்! - மின்வேலியில் சிக்கிய பரிதாபம்

கைதுசெய்யப்பட்ட தந்தை - மகன்
கைதுசெய்யப்பட்ட தந்தை - மகன்

மணல் கடத்தல் சம்பவத்தில், சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள வம்பலூர்பேட்டை தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது 31). அந்தப் பகுதியிலுள்ள செய்யாற்றில், மாட்டுவண்டியில் மணல் கடத்திவந்தது தொடர்பாக, இவர்மீது களம்பூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்தநிலையில், கடந்த 15-ம் தேதி இரவு, மணல் கடத்திய முரளியை களம்பூர் போலீஸார் பிடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தப்பி ஓடிய அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கடந்த 16-ம் தேதி மாலை, போளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்டகொளத்தூர் செய்யாற்றுப் படுகை அருகேயுள்ள பாலசுந்தரம் என்பவரின் விவசாய நிலத்தின் அருகில் சந்தேகப்படும் வகையில், முரளி இறந்துகிடப்பதாக உறவினர்களுக்குத் தகவல் கிடைத்தது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

தகவலறிந்த போளூர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்க முயன்றனர். ஆனால், `களம்பூர் போலீஸார் துரத்திச் சென்றதால்தான் முரளி இறந்திருக்கிறார். எனவே, அந்தக் காவல் நிலைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி உடலை விட மறுத்து முரளியின் உறவினர்கள் போராட்டம் செய்தனர். போலீஸ் உயரதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சமாதானக் கூட்டமும் நடத்தப்பட்டது. அதில், எஸ்.பி பவன்குமார் ரெட்டி, நடந்த சம்பவம் குறித்து களம்பூர் போலீஸாரிடமும், மரணமடைந்த முரளியின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவ அலுவலர், `முரளியின் உடலில் வெளிப்படையான காயம் எதுவும் இல்லை. மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம்’ என அறிக்கை வழங்கினார். இதையடுத்து, மரணத்தின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதற்காக முரளி இறந்து கிடந்த இடத்தில் எஸ்.பி பவன்குமார் ரெட்டி தலைமையிலான உயரதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மின்சாரம் தாக்கியதற்கான சில தடயங்கள் கிடைத்தன. அவற்றை தடய அறிவியல் கூட பரிசோதனைக்காகவும் சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.

கைது செய்யப்பட்ட தந்தை - மகன்
கைது செய்யப்பட்ட தந்தை - மகன்

தொடர்ந்து நடத்திய புலன் விசாரணையில், எலி மற்றும் காட்டுப்பன்றிகளிடமிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்காக நிலத்தின் உரிமையாளரான பாலசுந்தரமும், அவரின் மகன் சிவகுமாரும் சேர்ந்து மின்வேலி அமைந்திருந்ததும், அதில் சிக்கி முரளி இறந்திருந்ததும் தெரியவந்தது. முரளியின் சடலத்தைக் கண்ட தந்தையும் மகனும் மின்வேலியை அகற்றியதுடன், சடலத்தை உருட்டி அருகிலிருந்த செய்யாற்றில் தள்ளிவிட்டிருப்பதும் அம்பலமானது. இதையடுத்து, நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தது உட்பட சில பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து நில உரிமையாளர் பாலசுந்தரம், அவரின் மகன் சிவகுமார் இருவரையும் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறது காவல்துறை.

அடுத்த கட்டுரைக்கு