Published:Updated:

`மது கிடைக்கவில்லை; அதனால் போதை மாத்திரைகள்' -மெடிக்கல் கடை ஓனரால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

மரணம்
மரணம் ( மாதிரிப் படம் )

தினையத்தூரில் உள்ள தனியார் மருந்துக் கடை ஒன்றில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி போதை மாத்திரைகளை கள்ளத்தனமாக வாங்கி அதிக அளவில் உட்கொண்டார்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையான இளைஞர் ஒருவர் போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவரின் மருந்துச் சீட்டு இன்றி போதைமருந்து, மாத்திரைகளை விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைதான முகம்மது சியாத்
கைதான முகம்மது சியாத்

கொரோனா ஊரடங்கினால் மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் சுயமாக சாராயம் காய்ச்சி அருந்துவதும் மதுவுக்குப் பதிலாக போதை தரக்கூடிய மாத்திரைகள், ரசாயனக் கலவைகள் போன்றவற்றை மதுவாக தயாரித்து அருந்துவதும் தொடர்ந்தது. இதை அருந்தியவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள மருந்துக்கடைகளில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் போதை தரக்கூடிய கலவை மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கைதான முகம்மது பயாஸ்
கைதான முகம்மது பயாஸ்

இந்த நிலையில், தொண்டியைச் சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் சதாம் உசைன் என்பவர், தினையத்தூரில் உள்ள தனியார் மருந்துக் கடை ஒன்றில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி போதை மாத்திரைகளைக் கள்ளத்தனமாக வாங்கி அதிக அளவில் உட்கொண்டார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து தொண்டி எஸ்.ஐ சரவணன், அரசு மருத்துவர் மணிமுடி உள்ளிட்டோர் அந்த மருந்துக்கடையைக் கண்காணித்து வந்தனர்.

`தொழிற்சாலையிலிருந்து திருடிய மெத்தனால்...' - மாற்றுப் போதையால் கடலூரில் 3 பேருக்கு நேர்ந்த சோகம்

அப்போது தொண்டியைச் சேர்ந்த முகம்மது சியாத், முகம்மது பயாஸ் ஆகிய இருவரும் அந்த மருந்துக்கடையில், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி அதிகளவிலான தூக்க மாத்திரைகள் மற்றும் டானிக் பாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதையடுத்து, போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், மருந்துகளை விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளரின் மகன் பிரபு என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மருந்து மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மருந்து கடை விற்பனையாளர் பிரபு
மருந்து கடை விற்பனையாளர் பிரபு

இதனிடையே, போதை மாத்திரையை அதிகளவில் உட்கொண்டதால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சதாம் உசைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து 'கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற' பிரிவின்கீழ் கூடுதல் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு