Published:Updated:

`சென்னையில் திருடப்பட்ட பைக்கைக் கண்டுபிடித்த தருமபுரி இளைஞர்!'- காவல்துறையினரின் அலட்சிய பதில்

பைக்குடன் இளைஞர் சந்தோஷ்
பைக்குடன் இளைஞர் சந்தோஷ்

பொங்கலுக்கு தருமபுரிக்குச் சென்ற இளைஞரின் பைக், சென்னையில் திருடப்பட்டது. அதை தருமபுரியிலிருந்தபடியே பைக்கில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்டுபிடித்துள்ளார், அந்த இளைஞர்.

சென்னை நந்தனத்தில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருபவர் சந்தோஷ். இவர், பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊரான தருமபுரிக்குச் சென்றார். கடந்த 18 -ம் தேதி அதிகாலை 2 மணியளவில், சந்தோஷின் செல்போனுக்கு ஒரு அலெர்ட் மெசேஜ் வந்தது. அதைப்பார்த்த சந்தோஷ் முதலில் அதிர்ச்சியடைந்தார். அந்த மெசேஜில், சென்னையில் நிறுத்தியிருந்த பைக் திருடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து என்ன செய்யலாம் என யோசித்த சந்தோஷுக்கு, உடனடியாக அந்த ஐடியா தோன்றியது.

சிசிடிவியில் சிக்கிய பைக்
சிசிடிவியில் சிக்கிய பைக்

வாகனத்தில்தான் ஜி.பி.எஸ் கருவி இருக்கிறதே, அதனால் பைக்கை திருடிக்கொண்டு எங்கு சென்றாலும் கண்டுபிடித்துவிடலாம் எனக் கருதிய சந்தோஷ், பதற்றமடையாமல் நிம்மதியடைந்தார். உடனடியாக தருமபுரியிலிருந்தபடியே ஜி.பி.எஸ் கருவிமூலம் சென்னையில் பைக் எங்கு செல்கிறது என்பதைக் கண்காணித்தார். அப்போது, நந்தனத்திலிருந்து திருடப்பட்ட பைக் மயிலாப்பூர், அபிராமபுரம் என ஒவ்வொரு பகுதியையும் கடந்து சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து, பைக் நிறுத்தும் இடத்தை ஜி.பி.எஸ் கருவிமூலம் கண்டறிந்தார். பின்னர் 19-ம் தேதி தருமபுரியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார். ஜி.பி.எஸ் கருவி மூலம் காட்டிய இடத்துக்குச் சென்று பார்த்தார். அங்கு பைக் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த சந்தோஷுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பின்னர், அங்கிருந்து காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு கால் செய்து விவரத்தைக் கூறினார்.

பின்னர், அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்குவந்தார். மேலும், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பைக் திருட்டு தொடர்பாகப் புகார் தெரிவித்தார். அப்போது, பைக் திருடப்பட்டதற்கான ஆதாரங்களையும், சில சிசிடிவி காட்சிகளையும் அவர் கொடுத்தார். காவல்துறையினர் அளித்த பதில், சந்தோஷுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. `பைக்தான் கிடைத்துவிட்டதே பின்னர் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என காவல்துறையினர் சந்தோஷிடம் அலட்சியமாகப் பதிலளித்தனர். மேலும், `இது எங்கள் எல்லை இல்லை. அதனால் பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்' என்று கூறினர். காவல்துறையினர் இந்தப் பதிலை போனில் ரெக்கார்டு செய்த சந்தோஷ், அதை தற்போது வெளியிட்டுள்ளார். இது, காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியிலிருந்தபடியே ஜி.பி.எஸ் கருவிமூலம் சென்னையில் பைக் எங்கு செல்கிறது என்பதைக் கண்காணித்தேன். அப்போது நந்தனத்திலிருந்து திருடப்பட்ட பைக் மயிலாப்பூர், அபிராமபுரம் என ஒவ்வொரு பகுதியையும் கடந்து சென்றுகொண்டிருந்தது.
சந்தோஷ்

சந்தோஷிடம் போனில் பேசிய காவல்துறையினரின் ஆடியோவில், ``பைக்தான் கிடைத்து விட்டதல்லவா? புகார் எதற்கு கிளம்பு..!" என காவல்துறையினர் சொல்கின்றனர். மேலும், இது சைதாப்பேட்டை போலீஸ் எல்லை என்று கூறியுள்ளனர். பைக் கண்டெடுக்கப்பட்ட கோட்டூர்புரம் காவல் நிலையத்திலோ, பர்ஸ்ட் வண்டியை ஸக்‌ஷனில் விட்டுச் செல், இன்னும் ஒன்றரை மாதத்தில் குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டு கூப்பிடுகிறோம்' என்று போலீஸார் பதிலளித்துள்ளனர். காவல்துறையினரின் இந்தப் பதில்களைக் கேட்ட சந்தோஷ், பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்ட காவல்துறை அதிகாரி ஒருவர், ``சிசிடிவியில இருப்பவர்கள் கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டவர்கள். உன்னுடைய பைக்கைத் திருடிய இவர்கள், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருபவர்கள். அதனால், பைக் கிடைத்துவிட்டதே என்று சந்தோஷமாக இருங்கள். என்று சந்தோஷுக்கு ஆறுதலாக அட்வைஸ் செய்துள்ளார்.

representational image
representational image

இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், ``நான் மீடியாவில் பணியாற்றிவருகிறேன். இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் திருடப்பட்டால், ஜி.பி.எஸ் மூலம் எளிதாக அதைக் கண்டுபிடித்துவிடலாம். ஜி.பி.எஸ் கருவி சந்தையில் ரூ. 2,000 முதல் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிம்கார்டுடன்கூடிய ஜி.பி.எஸ் கருவியை வாகனத்தின் மறைவான இடத்தில் பொருத்தினால்போதும். ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை யார் எடுத்தாலும் (திருடினால் ) செல்போனில் அலாரம் ஒலித்து காட்டிக் கொடுத்துவிடும். மேலும், எங்கிருந்தாலும் பைக் செல்வதைக் கண்காணிக்க முடியும். 18-ம் தேதி அதிகாலையில்தான் என்னுடைய பைக் சென்னையில் திருடப்பட்ட தகவல் செல்போன் மூலம் எனக்குத் தெரிந்தது. என்னுடைய வண்டியில் ஜி.பி.எஸ் கருவி இருந்ததால் எளிதில் கண்டுபிடித்துவிட்டேன். ஆனால், காவல்துறையின் பதில்தான் எனக்கு வருத்தமளிக்கிறது" என்றார்.

பின் செல்ல