Published:Updated:

மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்குச் சிறை! - தமிழகத்தில் இதுவே முதல் முறை

மோட்டார் வாகனச் சட்டம்
மோட்டார் வாகனச் சட்டம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைக் கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

2019ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோர்க்குப் பலமடங்கு அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டது. முதல் முறையாக மதுபோதையில் வாகனம் ஓட்டினால் 6 மாதம் சிறை அல்லது 10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இரண்டாவது முறை (முதல் குற்றம் புரிந்த மூன்று ஆண்டிற்குள்) இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் 3000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். ஆனால், தமிழகத்தில் இந்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை.

போக்குவரத்துக் காவலர்கள்
போக்குவரத்துக் காவலர்கள்
Representational Image

இந்த நிலையில் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் 2013ல் நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தீர்ப்பாயம் அவருக்கு 4.37 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இந்த நஷ்ட ஈட்டுத்தொகையை அதிகரிக்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரித்துத் தீர்ப்பு வழங்கினர். மேலும் மனுதாரர் விபத்தின் போது மது அருந்தியதால் அவருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையில் 10 சதவிகிதம் பிடித்தம் செய்து 67.35 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

``மதுபானம் எளிதாகக் கிடைப்பதால்தான் சமூகத்தில் குற்றங்கள் பெருகிவிட்டன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விலை மதிக்க முடியாத இழப்புகள் ஏற்படுகின்றன. மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் வாகனங்களையும் பரிமுதல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைக் கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்“ என நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது.

நேற்று (15.03.2020) மாலை கூடுவாஞ்சேரி காவலர்கள் வாகனத் தணிக்கையில் இருந்த போது வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். காவல்துறையினர் விசாரணையில் உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பதும், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. அவர் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 4(1)(த) மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 185ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு காவல் நிலையம்
செங்கல்பட்டு காவல் நிலையம்

அதுபோல் செங்கல்பட்டுப் பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த பைக் ஒன்றைக் காவல்துறையினர் இன்று மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், மது அருந்தி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட சுரேஷ் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுரேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

போதை வாலிபர் சுரேஷ்
போதை வாலிபர் சுரேஷ்

“மோட்டார் வாகன திருத்தச்சட்டம் ஏற்கெனவே உள்ள சட்டம் என்றாலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது அமலுக்கு வந்துள்ளது. புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குச் சிறை தண்டனை விதிக்கப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை. சிறைதண்டனை, அதிக அபராதம் போன்றவற்றால் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது வெகுவாகக் குறையும்” எனக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு