Published:Updated:

டூவீலர் மீது மோதிய கார்; விபத்து செட்அப்! - ராமநாதபுரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த படுகொலை

கொலை
கொலை ( மாதிரி படம் )

அரவிந்தன் மீது வேண்டுமென்றே காரை மோதிக் கொலை செய்த நபர்களைக் கைதுசெய்யக் கோரி, அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் அருகே, மணல் கடத்தல் கும்பலை போலீஸாரிடம் காட்டிக்கொடுத்த ஆத்திரத்தால் விபத்து ஏற்படுத்தி, இளைஞரைக் கொலைசெய்த 3 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அரவிந்தன்
கொலை செய்யப்பட்ட அரவிந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் (22). மணல் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். கடந்த 22-ம் தேதி, தனது மைத்துனர் கல்யாணகுமாருடன் தேவிபட்டினம் சாலையில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது விபத்து அல்ல கொலை செய்துள்ளனர். கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டும்.
அரவிந்தனின் உறவினர்கள்.

பலத்த காயமடைந்த அரவிந்தன், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அரவிந்தன் மீது வேண்டும் என்றே காரை மோதி கொலை செய்த நபர்களைக் கைது செய்யக் கோரியும், அவர்கள்மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரியும், அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தேவிபட்டினம் போலீஸார் விபத்து வழக்கை கொலை வழக்காகப் பதிவுசெய்தனர். விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட பாலா என்பவரது வாகனங்களைப் பிடித்த போலீஸார் வழக்குப்பதிவு செய்ததும், இதற்கு அரவிந்தன் காரணமாக இருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் சென்ற டூவீலர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததுடன், விபத்து போல நாடகமாடியுள்ளனர். இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய தேவிபட்டினம் சேதுபதி, பெருங்குளம் சரவணன், நாகாச்சி கார்த்திக் ஆகியோரைப் போலீஸார் கைதுசெய்தனர்.

சாலை மறியல்
சாலை மறியல்

மேலும், கொலையில் தொடர்புடைய மகேந்திரன், இளையராஜா உள்ளிட்ட சிலரைத் தேடிவருகின்றனர். இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட அரவிந்தனின் உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டு உடலை வாங்கிச்சென்றனர். மணல் கடத்தல் கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் விபத்து ஏற்படுத்தி இளைஞரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு