Published:Updated:

திருவண்ணாமலை அருகே ஓடும் பேருந்தில் இளைஞர் வெட்டிக்கொலை! - 10 பேர் கும்பல் வெறிச்செயல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுந்தரி தியேட்டர் பஸ் நிலையம் அருகே, 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை, 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது.

Murder
Murder

படுகொலையான இளைஞர், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்யாறு சுந்தரி தியேட்டர் அருகே, டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார் சதீஸ்குமார். அப்போது, ஒரு கார் வேகமாக வந்து நின்றிருக்கிறது. அதிலிருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சதீஸ்குமாரை நோக்கி வந்துள்ளனர். இதைக் கண்ட சதீஸ்குமார், அங்கிருந்து தப்பி அந்த வழியாகச் சென்ற தனியார் பஸ்சில் ஏறித் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், ஆயுதங்களுடன் துரத்திய அந்தக் கும்பல், சதீஸ் ஏறிய அதே பஸ்சில் ஏறி அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இததைக் கண்டு பஸ்சில் உள்ளவர்கள் கத்தி கூச்சல் போடவே பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. உடனே அந்தக் கும்பல் பஸ்சைவிட்டு இறங்கி காரில் எறி தப்பிச் சென்றது.

Murder
Murder

இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு டி.எஸ்.பி சுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சதீகுமாரை மீட்டு செய்யாறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஸ்குமார் பாக்கெட்டில் இருந்த ஏ.டி.எம் கார்டை சோதனை செய்ததில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் முருகன் என்பவருடைய மகன் எனத் தெரியவந்தது.

  • சதீஸ்குமார் காஞ்சிபுரத்தில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். தொழில் போட்டி காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

கொலைசெய்த கும்பல் யார் என்பதையும், அவருக்கும் சதீஸ்குமாருக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்பதையும் செய்யாறு போலீஸார் தீவரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

பஸ்சில் ரத்தம்
பஸ்சில் ரத்தம்

பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது