சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்த மாடலிங் துறையைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள், முகமது சையத் என்பவர் தங்களை ஏமாற்றிவிட்டதாகப் புகாரளித்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க இணை கமிஷனர் பிரபாகரன், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் அரிக்குமார் ஆகியோருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். உடனடியாகக் களத்தில் இறங்கிய துணை கமிஷனர் கார்த்திகேயன், தன்னுடைய தனிப்படை மூலம் விசாரணையைத் தொடங்கினார். புகாரளித்த மூன்று பெண்களும் கொடுத்த ஆதாரங்கள், தகவல்கள் அடிப்படையில் விசாரணை சூடுபிடித்தது. அதோடு பெண்கள் குற்றம்சாட்டிய முகமது சையத்தையும் போலீஸார் பொறிவைத்துப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

யார் இந்த முகமது சையத்?
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருந்துவரும் முகமது சையத், பி.காம் படித்துள்ளார். சிறு வயது முதலே உடற்பயிற்சி செய்துவந்த இவர், சினிமாவில் ஹீரோவாக ஆசைப்பட்டார். அதனால் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மாடலிங் துறைக்குள் நுழைந்தார். சிக்ஸ்பேக் உடலோடு சினிமா வாய்ப்புகளைத் தேடி அலைந்தார். சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து மாடலிங் துறையில் முழு கவனத்தைச் செலுத்தினார். சிறு சிறு ஃபேஷன் ஷோக்களை முகமது சையத் நடத்தினார். அப்போது அவருக்கு அந்தத் துறையைச் சேர்ந்த இளம்பெண்களின் நட்பு கிடைத்தது. கொரோனா காலகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாத முகமது சையத், இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முழு கவனம் செலுத்திவந்தார். அப்போது தன்னுடைய ஜிம் பாடியின் வீடியோ, போட்டோக்களை அதில் பதிவேற்றினார். அதைப் பார்த்த மாடலிங் துறையைச் சேர்ந்த பெண்கள் பலர், முகமது சையத்துடன் நட்பாகப் பழகினர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முகமது சையத்தின் குடும்பம் வசதியானது. அதனால் சொகுசு காரில்தான் வலம் வருவார். அதையெல்லாம் பார்த்த பெண்கள், முகமது சையத்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர், மாடலிங் துறையைச் சேர்ந்த பெண்களை அழைத்துக்கொண்டு கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதை வழக்கமாகினார். அங்கு அவர்களுடன் முகமது சையத் நேரத்தை சந்தோஷமாகக் கடத்தினார். அந்தப் பெண்களுக்காக முதலில் பணத்தை கணக்கு பார்க்காமல் முகமது சையத் செலவழிப்பார். அதன் பிறகு` உன்னை என்னுடைய லைஃப் பார்ட்டனராக்க ஆசைப்படுகிறேன்’ என ரொம்பவே டீசன்ட்டாக காதலை வெளிப்படுத்துவார். முகமது சையத்தின் நடவடிக்கைகள், அவரின் லைஃப் ஸ்டைலைப் பார்த்த பெண்களில் பலர் அவரின் லவ்வையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து அந்தப் பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவர்களோடு சந்தோஷமாக இருந்துள்ளார். அதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இப்படி முகமது சையத்தை நம்பிய பெண்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கமானது. ஒரு பெண்ணுடன் முகமது சையத் பழகுவதை மற்ற பெண்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வார். அதனால் தன்னைத்தான் முகமது சையத் காதலிக்கிறார் என்ற நம்பிக்கை அவரோடு பழகிய பெண்களுக்கு இருந்தது. அதை கவனமாகக் கையாண்ட முகமது சையத்துக்கு கடந்த மாதம் சிக்கல் எழுந்தது.
சினிமாவில் துணை நடிகையாக நடித்தும் வரும் மாடலிங் துறையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை தி.நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வரும்படி முகமது சையத் வாட்ஸ்அப்பில் மெஸேஜ் அனுப்பினார். அதே மெஸேஜை இன்னும் இரண்டு காதலிகளுக்கும் கவனக்குறைவாக அனுப்பிவிட்டார். காதலினிடமிருந்து வந்த மெஸேஜை பார்த்த மூன்று பேரும் குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த கேளிக்கை விடுதிக்குச் சென்றனர். அப்போது அங்கு வந்த துணை நடிகையோடு கேளிக்கை விடுதிக்குள் முகமது சையத் சென்றுள்ளார். மற்ற இரண்டு பெண்களும் அதை அதிர்ச்சியோடு பார்த்தனர். யாரோடு தன்னுடைய காதலன் செல்கிறார் என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து கேளிக்கை விடுதியிலிருந்து வெளியேறிய முகமது சையத், அடுத்த காதலியின் வரவுக்காக அடையாறு பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டாவது காதலி, தி.நகரில் பார்த்த விஷயத்தை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அதன் பிறகு மூன்றாவது காதலியுடனும் முகமது சையத் மயிலாப்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்றார். அந்தப் பெண்ணும் தி.நகரில் பார்த்த காட்சிகளை காட்டிக்கொள்ளவில்லை. இதையடுத்து முகமது சையத்தின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட மூன்று காதலிகளும் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகினர்.
பின்னர் அவர்கள் மூன்று பேரும் நேரில் சந்தித்து முகமது சையத் குறித்து பேசியபோதுதான் அவர்கள் மூன்று பேரையும் ஒரே நேரத்தில் அவன் காதல் வலை வீசி ஏமாற்றிவருவது தெரியவந்தது. இதையடுத்து முகமது சையத்தை சட்டத்தின் முன் நிறுத்த திட்டமிட்ட முதல் காதலி, அவனோடு வழக்கம்போல பழகி வந்தார். அப்போது மது போதையில் முகமது சையத் மயங்கிக் கிடந்தபோது அவரின் கைரேகையைப் பயன்படுத்தி செல்போனை ஓப்பன் செய்தார். அதிலுள்ள போட்டோஸ், வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்களைப் பார்த்த முதல் காதலி அதிர்ச்சியில் உறைந்தார். அதை ஸ்கிரின் ஷாட்டாக எடுத்து தன்னுடைய செல்போனுக்கு அனுப்பிவைத்த முதல் காதலியான துணை நடிகை, மற்ற இரண்டு பெண்களுக்கும் அதை அனுப்பி வைத்து முகமது சையத்தின் முகத்திரையைக் கிழித்தார்.

ஆதாரங்கள் கிடைத்ததும் மூன்று பேரும் சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதோடு தங்களைப்போல இன்னும் வேறு எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது. மேலும் இந்தத் தகவல் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று புகாரளித்தனர். அதனால் கமிஷனர் சங்கர் ஜிவால், மூன்று இளம்பெண்களும் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் முகமது சையத் குறித்து ரகசியமாக விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே முகமது சையத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது பாலியல் வன்கொடுமை, மோசடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
துணை கமிஷனர் கார்த்திகேயனின் தனிப்படை போலீஸார் துரிதமாகவும், அதேநேரத்தில் ரகசியமாகவும் விசாரித்து முகமது சையத்தை சிறையில் அடைத்துள்ளனர்.