Published:Updated:

`க்ரைம் சீரியல் ரெபரென்ஸ்.. ஸ்கெட்ச் போட்ட காதல் ஜோடி!'- பலியான அப்பாவி இளம்பெண்

Representation image
Representation image

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் க்ரைம் சீரியலைப் பார்த்து கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷரில் குடியரசு தினத்தன்று அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் ஒன்று போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது. கழுத்தை இறுக்கி கொலை செய்ததற்கான தடயங்கள் இருந்தன. இந்த நிலையில்தான் நொய்டாவைச் சேர்ந்த பூனம் என்ற இளம்பெண்ணைக் காணவில்லை எனப் புகார் எழுந்தது. புலந்த்ஷரில் கண்டெடுக்கப்பட்டது பூனம் என்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

அந்த இளம்பெண் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பூனம் மரணம் மர்மமாக இருந்த நிலையில், அவரது செல்போன் அழைப்பு மூலம் கபில் என்ற இளைஞர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு கபில் - பூனம் இடையேயான நட்பு குறித்து தெரிந்திருக்கவில்லை. இதன்பின்னர் போலீஸார் வழக்கமான பாணியில் விசாரணையைத் தொடங்கினர்.

Representation image
Representation image

விசாரணையில் கபில் சொன்ன தகவல்கள் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய போலீஸ் அதிகாரிகள், ``கபிலுக்கும் புலந்த்ஷரைச் சேர்ந்த ரூபி என்ற பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளைடைவில் இது காதலாக மாறியுள்ளது. கபில் - ரூபி இருவரும் திருமணம் செய்ய முடிவுசெய்து பெற்றோரின் சம்மதத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். ரூபியின் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தால் நம்மைப் பிரித்து விடுவார்கள் என எண்ணி ஒரு திட்டம் தீட்டியுள்ளனர்.

`16 ஆண்டுக்கால நட்பு... எமனாக வந்த ஹீட்டர்!’ - 8 பேர் மரணம் குறித்து விவரிக்கும் ரிசார்ட் ஊழியர்

அதாவது ரூபியை யாரோ கொலை செய்ததுபோல் சித்திரிக்க முயன்றுள்ளனர். அதற்காக இவர்கள் இருவரும் ஒரு பெண்ணை கொலை செய்வது என திட்டம் தீட்டியுள்ளனர். அதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்த பெண்தான் பூனம். இதையடுத்து, பூனத்திடம் நட்பாகப் பழக ஆரம்பித்துள்ளார் கபில். பூனத்தின் நம்பகத்தன்மையைப் பெறுவதற்காக காத்திருந்தார்.

இந்த நிலையில்தான் ஜனவரி 25-ம் தேதி பூனத்தை தொடர்புகொண்டு ஷாப்பிங் செல்லலாம் என அழைத்துள்ளார். கபிலின் பேச்சை நம்பி வந்த இளம்பெண்ணை ஆட்கள் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று கார் சீட்பெல்ட்டைக் கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

Representation image
Representation image

பூனத்தின் உடலை ரூபியின் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் கிடத்தியுள்ளார். பூனம் அணிந்திருந்த ஆடைகளை அகற்றிவிட்டு ரூபியின் ஆடை மற்றும் அணிகலன்களை அணிவித்துள்ளனர். இறந்தது ரூபி என சித்திரிக்க முயன்றுள்ளனர். முகத்தையும் அடையாளம் தெரியாத வகையில் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, கபில் - ரூபி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். மகளைக் காணவில்லை என பூனத்தின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் இவர்களின் சதி அம்பலமாகியுள்ளது. டிவி-யில் ஒளிபரப்பாகும் க்ரைம் சீரியலில் இதுபோன்ற சம்பவத்தைப் பார்த்து இவ்வாறு செய்துள்ளார்'' என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு