Published:Updated:

சென்னை: திருடச் சென்ற இடத்தில் நடந்த கொலை - இன்ஜினீயர்கள் சிக்கியது எப்படி?!

கொலைசெய்யப்பட்ட ஷாகின் ஷா காதர்

சென்னையில் இரும்பு திருடச் சென்ற இடத்தில் அடித்தே ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: திருடச் சென்ற இடத்தில் நடந்த கொலை - இன்ஜினீயர்கள் சிக்கியது எப்படி?!

சென்னையில் இரும்பு திருடச் சென்ற இடத்தில் அடித்தே ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட ஷாகின் ஷா காதர்

சென்னை சைதாப்பேட்டை தாடந்தர் நகர் மைதானம் அருகில் புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் இன்ஜினீயர்கள் உள்பட வடமாநில தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு நேற்றிரவு பைக்கில் மூன்று பேர் வந்தனர். பின்னர் அவர்கள் இரும்பு பொருள்களைத் திருடிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாராகினர். பைக்கின் சத்தம் கேட்டு அங்கு வேலைப்பார்த்தவர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் பைக்கில் வந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவன் தப்பி ஓட இரண்டு பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களைப் பிடித்து கட்டி வைத்து சிலர் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயங்களுடன் ஷாகின் ஷா காதர்
காயங்களுடன் ஷாகின் ஷா காதர்

தப்பி ஒடியவன், உறவினர்கள் மூலம் சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தான். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் போலீஸார் இருவரையும் மீட்டனர். விசாரணையில் இரும்பு திருட வந்தது சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தைச் சேர்ந்த ஷாகின் ஷா காதர் என்றும் இன்னொருவன் வினோத் என்றும் தெரிந்தது. தப்பி ஓடியவன் 16 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. இந்தத் தகவலைக் கேள்விபட்ட ஷாகின் ஷா காதரின் உறவினர்கள் சைதாப்பேட்டை காவல் நிலையத்தின் முன்பு குவிந்தனர். அப்போது ஷாகின் ஷா காதரும் வினோத்தும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தகவல் உறவினர்களுக்குக் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்குச் சென்றனர்.

இந்த நிலையில் ஷாகின் ஷா காதரை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேள்விபட்ட அவனின் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக வினோத், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக துணை கமிஷனர் மகேந்திரன் நேரில் சென்று விசாரித்தார். ஷாகின் ஷா காதரின் மரணம் குறித்து விசாரிக்க உதவி கமிஷனர் கிறிஸ்டி ஜெயசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ-க்கள் வேணுகோபால், முருகேசன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

கைது
கைது

போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் 8 பேர் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது ஷாகின் ஷா காதரையும் வினோத்தையும் தாக்கியது தாம்பரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன், ஜெயராம், விருதுநகரைச் சேர்ந்த நம்பிராஜ், திருவள்ளூர் பாலசுப்பிரமணியன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், திருவண்ணாமலையைச் சேர்ந்த மனோஜ், கேரளாவைச் சேர்ந்த அஜித் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் எனத் தெரியவந்தது. இதில் சிவபிரகாசத்தை தவிர மற்றவர்கள் இன்ஜினீயர்களாக பணியாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களைப் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உயிரிழந்த ஷாகின் ஷா காதர் மீது ஏற்கெனவே கிண்டி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தச் சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.