Published:Updated:

போதையால் வந்த வினை; நண்பரால் கொலை செய்யப்பட்ட வாலிபர்! -பரமக்குடியில் பயங்கரம்

கொலை
கொலை ( Representational Image )

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் என்ற ஜெயக்குமார், மது போதையில் இருந்த தனது நண்பர்களாலேயே வெட்டிக் கொலை செய்யபட்டார்.

ஒன்றாக இருந்த நண்பர்களிடையே குடிபோதை மயக்கத்தினால் எழுந்த வாக்குவாதத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் காவலர் ஒருவர் அவரது நண்பரால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் (பழைய படம்)
கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் (பழைய படம்)
உ.பாண்டி

நாடுமுழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தன. மதுக்கடைகளும் ஊரடங்கினால் மூடப்பட்டிருந்தன. இதனால் போதையினால் ஏற்படும் குற்றச்செயல்கள், வீண் தகராறுகள் என எல்லாமும் கட்டுக்குள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி தமிழக அரசு மதுக்கடைகளை மீண்டும் திறந்தது. இதனால் 40 நாள்களாக மது குடிக்க முடியாமல் இருந்த மதுப் பிரியர்கள் ஒரே நாளில் அதிகளவில் மதுவினை வாங்கிக் குடித்து தங்கள் ஏக்கத்தைப் போக்கிக் கொண்டனர். அதிக மது உட்கொண்டதால் ஏற்பட்ட போதையின் விளைவாக தன்னிலை மறந்து பலர் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டனர். மது போதையின் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் 15 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் என்ற ஜெயக்குமார், மது போதையில் இருந்த தனது நண்பர்களாலேயே வெட்டிக் கொலை செய்யபட்டார். நேற்று காலை பரமக்குடி அரசுக் கல்லூரி அருகே உள்ள கண்மாய் கரைப் பகுதியில் ஜெயக்குமாரும் அவரது நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

கொலை
கொலை
மாதிரி படம்

இதில் ஆத்திரமடைந்த பொன்னையாபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் ஜெயக்குமாரைக் கழுத்து மற்றும் முகத்தில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ஆனந்த் சரணடைந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த எமனேஸ்வரம் போலீஸார் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

நண்பரால் வெட்டப்பட்ட காவலர் ரபீக் முகம்மது
நண்பரால் வெட்டப்பட்ட காவலர் ரபீக் முகம்மது
உ.பாண்டி

இதே போல் ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூரைச் சேர்ந்தவர் ரபீக் முகம்மது. ராமேஸ்வரத்தில் போக்குவரத்துக் காவல் பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் இவர் தற்காலிகப் பணியாக உச்சிப்புளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஓய்வு நேரத்தில் கூரியூர் வந்த இவர் தனது நண்பர் பாட்ஷாவுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு எழவே காவலர் ரபீக் முகமதுவை, பாட்ஷா அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த ரபீக் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து ராமநாதபுரம் நகர் போலீஸார் பாட்ஷாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு