Published:Updated:

`அவளை மறக்க முடியாது; என்னைத்தான் காதலிக்கிறாள்!'- வாலிபரைக் கொன்று புதைத்த நண்பர்கள்

எஸ்.மகேஷ்

`உயிர் கொடுப்பான் தோழன்' என்று சொல்வதுண்டு. திருவள்ளூரில் காதல் மோதலில் `உயிரையும் எடுப்பான் தோழன்' என்பது நிரூபணமாகியுள்ளது.

MAGESH KUMAR
MAGESH KUMAR

திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூரை ஏரிக்கரையில் கடந்த 27-ம் தேதி வாலிபர் ஒருவரை சிலர் கொலை செய்து புதைத்ததாகத் தகவல் பரவியது. இந்தத் தகவலையறிந்த டி.எஸ்.பி கங்காதரன், திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீஸார் ஏரிக்கரைக்கு வந்தனர். அவர்கள் நீண்ட நேரமாகத் தேடியும் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இதனால் தேடுதல் பணியை விட்டுவிடலாம் எனச் சில போலீஸார் கருதினர். ஆனால், டி.எஸ்.பி கங்காதரன் மட்டும் `இன்னும் கொஞ்ச நேரம் தேடுவோம்' என்று கூறினார்.

POLICE
POLICE

இந்தச் சமயத்தில் ரத்தத் தூளிகள் சிந்தியபடி ஒருவரை ஏரிக்கரையின் முட்புதர் அருகே இழுத்துச் சென்றதற்கான தடயங்கள் காணப்பட்டன. அதைப் பின்தொடர்ந்து சென்ற போலீஸாருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. தோண்டப்பட்ட குழியில் பாதி மணல் மூடப்பட்ட நிலையில் ஒருவர் புதைக்கப்பட்டிருந்தார். அதை போலீஸார் தோண்டி எடுத்தனர். அப்போது உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதினர்.

சடலத்தை மீட்ட போலீஸார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் மகேஷ்குமார் (20) என்று தெரிந்தது. இவர், மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்த போலீஸார் அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.

MAGESH KUMAR
MAGESH KUMAR

மகேஷ்குமார் சடலத்தைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். எதற்காக மகேஷ்குமார் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நண்பர்களே மகேஷ்குமாரைக் கொலை செய்து ஏரிக்கரையில் குழிதோண்டி புதைத்ததாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மேல்நல்லாத்தூர் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார், வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார். குடும்பத்தோடு திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் அவர் வசித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் மேல்நல்லாத்தூருக்கு மகேஷ்குமார் குடும்பத்தினர் வந்துள்ளனர். மகேஷ்குமார், ஒரு பெண்ணைக் காதலித்துவந்துள்ளார்.

POLICE
POLICE

அந்தப் பெண்ணை மகேஷ்குமாரின் நண்பர் ஒருவரும் விரும்பியுள்ளார். இதனால் மகேஷ்குமாரிடம் அந்தப் பெண்ணைக் காதலிக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் மகேஷ்குமார், காதலை கைவிடவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நண்பர்களுடன் சேர்ந்து மகேஷ்குமாரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த 27-ம் தேதி மகேஷ்குமாரை மதுஅருந்த ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போதையில் இருந்த மகேஷ்குமாரிடம் அந்தப் பெண்ணைக் காதலிக்காதே, மறந்துவிடு என்று கூறியுள்ளனர்.

அதற்கு மகேஷ்குமார், அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். என்னால் அவளை மறக்க முடியாது. அந்தப் பெண்ணும் என்னைத்தான் காதலிக்கிறாள் என்று கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில்தான் மகேஷ்குமாரை அவரின் நண்பர்கள் அடித்துக் கொலை செய்து சடலத்தை ஏரிக்கரையில் புதைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிலர் அதைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

MAGESH KUMAR
MAGESH KUMAR

எழும்பூர் நீதிமன்றத்தில் மகேஷ்குமாரின் நண்பர்கள் அஜித்குமார், சிவா என்கிற சிவசங்கரன், கார்த்திக், விக்னேஷ், தினேஷ் ஆகிய 5 பேர் சரண் அடைந்துள்ளனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் சுகுமார், மணி பாரதி ஆகியோரைக் கைது செய்துள்ளோம்.

அவர்களிடம் விசாரித்தபோது, சில பிரச்னைகளுக்காக மகேஷ்குமாரை கொலை செய்ததாகத் தெரிவித்தனர். இதனால் நீதிமன்றத்தில் சரண் அடைந்த 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அதன் பிறகுதான் மகேஷ்குமார் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

POLICE
POLICE

காதல் விவகாரத்தில் மகேஷ்குமார் கொலை செய்யப்பட்ட தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் இந்தக் கொலை எதற்காக நடந்தது என்பதையும் போலீஸார் தெரிவிக்கவில்லை. இதனால் மகேஷ்குமார் கொலையில் உள்ள மர்மமுடிச்சுகள் அவிழாமல் உள்ளன. திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் ஏரிக்கரையில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.