Published:Updated:

ஆம்பூர்: `கண்டிச்சும் திருந்தலை... சுவர் ஏறி வீட்டுக்குள்ள வர்றான்!’ - அதிரவைத்த எலெக்ட்ரீஷியன்

கொலை செய்யப்பட்ட ராஜேஷ்
கொலை செய்யப்பட்ட ராஜேஷ்

``சுவர் ஏறி வீட்டுக்குள்ள வந்து பொண்டாட்டிக்கிட்ட பேசுறான். ரெண்டு பேரும் என்னைக் கேணையன்னு நெனச்சுட்டாங்க. அந்த ஆத்திரத்துலதான் அவனை எரிச்சிக் கொன்னுட்டேன்’’ என்று அதிரவைத்திருக்கிறார், ஆம்பூர் எலெக்ட்ரீஷியன் ஒருவர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள தேவலாபுரம் ஊராட்சி, ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). எலெக்ட்ரீஷியனாக இருக்கிறார். இவரின் மனைவி அதே பகுதியிலுள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், மணிகண்டனின் மனைவிக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் (27) என்ற இளைஞருக்கும் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜேஷுக்கும் திருமணமாகி ஓர் குழந்தை இருக்கிறது. தவறான உறவைக் கைவிடுமாறு மனைவியையும் ராஜேஷையும் மணிகண்டன் பலமுறை எச்சரித்திருக்கிறார். அவரின் கண்டிப்புக்கு இருவரும் மிரளவில்லை என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மணிகண்டன்
கைது செய்யப்பட்ட மணிகண்டன்

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ராஜேஷைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. அதன்படி, சம்பவத்தன்று பெட்ரோல் நிரப்பிய கேனுடன் ராஜேஷின் வீட்டுக்குள் புகுந்த மணிகண்டன் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்திருக்கிறார். பின்னர் அவர்மீது பெட்ரோல் ஊற்றி, தீவைத்திருக்கிறார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறித் துடித்த ராஜேஷை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் மரணமடைந்தார்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக, உமராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனைக் கைதுசெய்தனர். விசாரணையில், மணிகண்டன் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சி ரகம். ``‘என் பொண்டாட்டி வேலை செய்யுற அதே ஷூ கம்பெனியிலதான் ராஜேஷும் வாட்ச்மேனாக வேலை செஞ்சிக்கிட்டு இருந்தான். அவங்க ரெண்டு பேரும் கம்பெனியில நெருக்கமாகியிருக்காங்க. எதிரெதிரே வீடு இருக்குறதுனால அவனுக்கு இன்னும் வசதியாப் போச்சு. நான் இல்லாத நேரத்துல முன்வாசல் வழியா வீட்டுக்குள்ள வர்றான். நான் வீட்டுல இருந்தாலும், நைட் டைம்ல சுவர் ஏறிக் குதிச்சு உள்ளே வர்றான்.

கொலை செய்யப்பட்ட ராஜேஷ்
கொலை செய்யப்பட்ட ராஜேஷ்

ஒருநாள் நைட் என்கிட்ட மாட்டிக்கிட்டான். சுவர் ஏறி குதிச்சு தப்பிச்சு ஓடிட்டான். வெளியில சொன்னா எனக்குத்தான் அசிங்கம்னு அமைதியா இருந்தேன். அவனைச் சந்திச்சு, `உனக்கும் பொண்டாட்டி புள்ளைங்க இருக்காங்க. அப்புறம் ஏண்டா என் வாழ்க்கையைக் கெடுக்கிறே’னு சொல்லி கண்டிச்சேன். என் பொண்டாட்டியும் திருந்தலை. அவகிட்ட இருந்து இதுவரைக்கும் மூணு செல்போனைப் பிடுங்கி உடைச்சிருக்கேன். ரெண்டு பேரும் என்னை என்னனு நெனச்சிட்டாங்க... அவங்க ரெண்டு பேரு மேலயும் எனக்கு பயங்கரமான கோவம் வந்துச்சு. என் குடும்பத்தைக் கெடுத்த ராஜேஷைக் கொடூரமா கொல்லணும்னு முடிவு பண்ணினேன். பெட்ரோலை வாங்கிக்கிட்டு அவன் வீட்டுக்குள்ள புகுந்து, அவன் மேல ஊத்திக் கொளுத்திட்டேன். அவனும் என் கண்ணு முன்னாடி வலி தாங்க முடியாம கதறுனான். அபபோதான் என் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு’’ என்று கூறியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், திருப்பத்தூர் கிளைச் சிறையில் அவரை அடைத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு