காஞ்சிபுரம் மாநகராட்சியிலுள்ள ராஜகோபாலன் பூபதி தெருவில் அறிவழகன்-அமுதா தம்பதியர் வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு சௌமியா என்ற மகளும், சரண்சிங் என்ற மகனும் உள்ளனர். சரண்சிங் காஞ்சிபுரத்தில் டாட்டூ கடையையும், உணவகமும் நடத்திவருகிறார். இவர்கள் வீட்டருகே விஷ்ணு என்பவரின் குடும்பம் வசித்துவருகிறது. விஷ்ணுவின் வீட்டில் வளர்ந்துவரும் நாய் இரவு நேரங்களில் குரைத்துக்கொண்டே இருப்பது தொந்தரவாக இருப்பதாக, சரண்சிங் விஷ்ணுவின் வீட்டில் புகார் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவும் இரண்டு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு குடும்பத்தினர் மற்றும் அவரின் நண்பர்கள் சரண்சிங் வீட்டில் உள்ளவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். விஷ்ணு கூர்மையான ஆயுதத்தால் சரண்சிங்கைக் குத்தியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில் படுகாயமடைந்த சரண், அவரின் குடும்பத்தினர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சரண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அந்தப் பகுதி காவல்துறையினர் விஷ்ணு, அவரின் தாயார் சித்ரா, அவரின் தம்பி சிவா ஆகிய மூவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் விஷ்ணு கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது தெரியவந்தது.
மேலும், இருவருக்கும் ஏற்கெனவே இருந்த முன்விரோதம் காரணமாக, கஞ்சா போதையிலிருந்த விஷ்ணு சரண்சிங்கை குத்திக் கொலை செய்திருக்கிறார். மேற்கொண்டு இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.