Published:Updated:

மனைவியுடன் நட்பு; இளைஞரைக் கொலை செய்த கணவர்! - கல்லைக்கட்டி கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்

கொலைசெய்யப்பட்ட ராமு
கொலைசெய்யப்பட்ட ராமு

மனைவியுடன் இளைஞர் நட்பாக பழகியதால் ஆத்திரமடைந்த கணவர், அவரைக் கொலை செய்ததோடு கல்லைக்கட்டி கிணற்றில் வீசிச் சென்ற கொடூரம் நடந்திருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள படப்பை முருகாத்தம்மன் பேட்டையைச் சேர்ந்தவர் ராமு (32). இவரின் மனைவி ரேணுகா (31). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் ராமு வேலை செய்துவந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய மகாலட்சுமியுடன் (32) ராமுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. மகாலட்சுமிக்கு திருமணமாகி மணி என்ற கணவரும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகாலட்சுமியுடன் ராமு பழகுவது தெரிந்த மனைவி ரேணுகா கணவரைக் கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தினேஷ்
தினேஷ்

இந்தநிலையில் மகாலட்சுமிக்கு வஞ்சுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் (21) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தத் தகவல் தெரிந்ததும் ராமுவுக்கும் மகாலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. அதை மகாலட்சுமி, தினேஷிடம் கூறினார். இதையடுத்து ராமுவைக் கொலை செய்ய தினேஷ் திட்டமிட்டார்.

சென்னை: 'மாநகராட்சி ஊழியர் கொலை'- இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது!

கடந்த 4.7.2021-ம் தேதி ராமுவை மது அருந்த வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தினேஷ் அழைத்தார். அங்கு வந்த ராமுவுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்தனர். அப்போது மகாலட்சுமியின் கணவர் மணியும் சேர்ந்து மது அருந்தினார். அளவுக்கு அதிகமான போதையில் ராமு மயங்கினார். உடனே தினேஷ், தன்னுடைய நண்பர்களான வினோத் (20), பிரபாகரன் (23), வண்டலூரைச் சேர்ந்த சின்னராசு (18), நரியம்பாக்கத்தைச் சேர்ந்த ஆகாஷ் (19) ஆகியோரை அங்கு அழைத்தார். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து ராமுவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் ராமுவின் சடலத்தோடு பெரிய கல்லை ஒன்றைக் கட்டி அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டுச் சென்றனர்.

வினோத்
வினோத்

ராமுவைக் காணவில்லை என அவரின் மனைவி ரேணுகா, மணிமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மகாலட்சுமியின் கணவர் மணி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோதுதான் ராமுவைக் கொலை செய்து கிணற்றில் சடலத்தை வீசியதை மணி கூறினார். இதையடுத்து ராமுவின் சடலத்தை தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றிலிருந்து மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காணவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்கமாக மாற்றிய மணிமங்கலம் போலீஸார், மணி, தினேஷ் உட்பட ஆறு பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மகாலட்சுமியிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட நட்பால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு