Published:Updated:

`நக்கலா பேசியதால் கொன்னு புதைச்சோம்!’ - அரக்கோணத்தை அதிரவைத்த கறிக்கடைக்காரர் கொலை

லோகேஸ்வரன்.கோ

அரக்கோணம் அருகே இளைஞர் ஒருவரைக் கொன்று புதைத்த சம்பவத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் சிக்கியிருக்கிறார்கள்.

ஜெய்லாவுதீன்
ஜெய்லாவுதீன்

அரக்கோணம் அடுத்த அன்வர்திகான் பேட்டையைச் சேர்ந்தவர் ஜெய்லாவுதீன் (34). திருமணமான இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை செய்துவந்தார். கடந்த 6-ம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்ற ஜெய்லாவுதீன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பதறிப் போன குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தனர். ஜெய்லாவுதீன் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Representational image
Representational image

இந்த நிலையில், அன்வர்திகான் பேட்டை அருகே உள்ள கீழ்ஆவதம் ஏரியில் பொதுப்பணித் துறையினர் நேற்று குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டனர். ஏரிக்கரையின் ஒரு பகுதியில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு தூர்வாரியபோது, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்தது. அதிர்ச்சியடைந்த பொக்லைன் ஓட்டுநர், அரக்கோணம் தாலுகா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். கிராம மக்களும் குவிந்தனர். இறந்தவரின் தலை மற்றும் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் தென்பட்டன. அந்த நபர் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். விசாரணையில், கொல்லப்பட்ட நபர் சமீபத்தில் மாயமான ஜெய்லாவுதீன் என்பதும் தெரியவந்தது.

Murder
Murder

சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஜெய்லாவுதீன் கொலையில் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதில், 2 பேர் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். மூன்று பேரையும் விரைந்து பிடித்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ``கொலை வழக்கில் பிடிபட்ட 3 பேரும் 6-ம் தேதி இரவு ஆவதம் ஏரியில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த ஜெய்லாவுதீனைப் பார்த்து, `நீ யாருடா’ என்று கேட்டுள்ளனர். அவர் நக்கலாகப் பதில் சொன்னதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 3 பேரும் தாக்கியதில் ஜெய்லாவுதீன் இறந்துவிட்டார்.

ஜெய்லாவுதீனைப் பார்த்து, `நீ யாருடா’ என்று கேட்டுள்ளனர். அவர் நக்கலாகப் பதில் சொன்னதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
போலீஸார் தகவல்

சடலம் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தைச் சிதைத்துள்ளனர். பிறகு ஜெய்லாவுதீன் கட்டியிருந்த லுங்கி மற்றும் சட்டையை அவிழ்த்து கை, கால்களைக் கட்டி ஏரியிலேயே சடலத்தை புதைத்துவிட்டனர்’’ என்கின்றனர் போலீஸார். கொலை வழக்கில் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.