Published:Updated:

`ஆள் இருப்பது கண்ணுக்கு தெரியலையா?' - எலியட்ஸ் பீச்சுக்குச் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்

எஸ்.மகேஷ்

குடும்பத்தினருடன் பெசன்ட் நகர் கோயில் திருவிழாவுக்கு வந்தவரை கண்ணகி நகரைச் சேர்ந்த கும்பல் சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Eliots Beach
Eliots Beach

சென்னை, டி.பி.சத்திரம் செனாய் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மில்லர்ராஜ். இவரின் மகன் பென்னிராஜ் (20). இவர், மேளம் அடிக்கும் தொழில் செய்துவந்தார். கடந்த 7-ம் தேதி குடும்பத்தினருடன் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி கோயில் திருவிழாவுக்குச் சென்றார். குடும்பத்தினருடன் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

Eliots Beach
Eliots Beach

இரவு 11 மணியளவில் பென்னிராஜ், சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். பிறகு அவர் திரும்பிவரவில்லை. இதனால் அவரின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கத்திக் குத்துக்காயங்களுடன் பென்னிராஜ் இறந்துகிடந்தார். தகவலையறிந்த அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பென்னிராஜ் கொலை செய்யப்படும்போது அவரின் குடும்பத்தினர் அருகில்தான் இருந்துள்ளனர். ஆனால், அங்கு நடந்த தகராறை அவர்கள் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

பென்னிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சாஸ்திரிநகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பென்னிராஜைக் கொலை செய்தது யார், என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் எனப் போலீஸார் விசாரித்தனர்.

Benny raj
Benny raj

கொலை சம்பவம் குறித்துப் பேசும் போலீஸார், ``பெசன்ட் நகரில் வேளாங்கண்ணி கோயில் திருவிழாவுக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் எலியட்ஸ் கடற்கரையில் (பெசன்ட் நகர் கடற்கரை) கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். இந்த நிலையில்தான், திருவிழாவுக்கு குடும்பத்தினருடன் வந்த பென்னிராஜ் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரின் உடலில் வயிறு, மார்பு, முதுகு, முகம் என 4 இடங்களில் கத்துக்குத்து காயங்கள் இருந்தன.

கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தோம். கண்ணகிநகரைச் சேர்ந்த ஒரு கும்பல் அங்கு அமர்ந்திருக்கின்றனர். அந்த இடத்தின் அருகில் பென்னிராஜ் சிறுநீர் கழிக்கச் செல்கிறார். அதை கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த கும்பல் கண்டிக்கிறது. மேலும், `டேய் அங்கே போ... இங்கு ஆள் இருப்பது கண்ணுக்கு தெரியலையா' என்று கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அதை பென்னிராஜ் கண்டுகொள்ளாமல் சிறுநீர் கழிக்கிறார்.

penni raj
penni raj

இதையடுத்து, பென்னிராஜுக்கும் கண்ணகிநகர் கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. ஆத்திரமடைந்த கண்ணகிநகர் கும்பல், கத்தியால் சரமாரியாக பென்னிராஜை கொலை செய்து விட்டு தப்பிச் செல்கிறது. அவர்கள் யாரென்று விசாரித்துவருகிறோம். விரைவில் இந்தக் கொலை வழக்கில் கண்ணகிநகர் கும்பல் கைது செய்யப்படுவார்கள்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``பென்னிராஜை கொலை செய்த கும்பல், கஞ்சா போதையில் இருந்துள்ளது. பென்னிராஜும் அந்தக் கும்பலுடன் போராடியிருக்கிறார். ஆனால், ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதால் அவரால் சமாளிக்க முடியவில்லை.

murder
murder

சந்தேகத்தில் அடிப்படையில் சம்பவ இடத்திலிருந்த 10 பேரிடம் விசாரணை நடந்துவருகிறது" என்றார்.