Election bannerElection banner
Published:Updated:

சென்னை: வீட்டு வாசலில் இளைஞர் கொலை - தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த ரெளடிக் கும்பல்

கொலை செய்யப்பட்ட நாராயணன்
கொலை செய்யப்பட்ட நாராயணன்

சென்னையில் வீட்டு வாசலில் தந்தையின் கண் முன்னே இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், சக்தி நகர், பட்டேல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரம்மதேவன் என்கிற ஆட்டோ டிரைவர். இவரது மகன் நாராயணன்(23), டிப்ளமோ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். 7-ம் தேதி இரவு நாராயணன் அங்குள்ள சாலையோர கடையில் டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். வீட்டின் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் நாராயணனை வழிமறித்தது.

கொலை
கொலை
representational image

பின்னர் அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாராயணனுக்கு வெட்டு விழுந்தது. அதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி அவர் கீழே விழுந்தார். நாராயணனின் அலறல் சத்தம் கேட்டு அவரின் தந்தை வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்தார். அதைப்பார்த்த மர்மகும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. வீட்டு வாசலில் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த நாராயணனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நாராயணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், நாராயணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிந்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியில் பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான தனஞ்செயன் என்பவருடன் நாராயணனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது.

கொலை
கொலை

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் நாராயணன் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி தனஞ்செயன் மற்றும் அவரின் கூட்டாளிகளை அரிவாளால் வெட்டியிருக்கிறார். அதில் தனஞ்செயன் தரப்பினருக்கு வெட்டுகாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. இதில் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் தனஞ்செயன் தனது ஆதரவாளர்களுடன் நாராயணனை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சாரதி(19), செல்வா(19), மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள தனஞ்செயன் மற்றும் அவனது கூட்டாளிகள் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வீட்டு வாசலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு