Published:Updated:

கொலை செய்யும்போது `ஆன்' ஆன செல்போன்; காட்டிக்கொடுத்த ஆடியோ! - சென்னைக் கடற்கரையில் நடந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட ஜெயராம்
கொலை செய்யப்பட்ட ஜெயராம்

சென்னையில் கஞ்சா போதையில் நடந்த கொலை சம்பவத்தை கொலை செய்யப்பட்டவரின் செல்போன் தானாக ஆன் ஆகி காட்டிக் கொடுத்துள்ளது.

சென்னை திருவொற்றியூர், ராஜா கடை, ராமானுஜம் தெருவைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி ரேவதி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகள், கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவருகிறார். மகன் ஜெயராம் (18), பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியில் சென்ற ஜெயராம் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரைக் குடும்பத்தினர் தேடிவந்தனர்.

ஜெயராம் கொலை வழக்கில் கைதானவர்
ஜெயராம் கொலை வழக்கில் கைதானவர்

இந்த நிலையில், ஜெயராமின் சகோதரியின் செல்போனுக்கு ஆடியோ ஒன்று வந்தது. அதைக்கேட்ட அவர் அதிர்ச்சியடைந்தார். அந்தப்பதிவில், ``ஜெயராமை சிலர் அடித்துக் கொலை செய்து என்.டி.ஓ. குப்பம் கடற்கரையில் புதைத்து உள்ளனர்” என்று கூறப்பட்டிருந்தது. மேலும், ஜெயராமைக் கொலை செய்த 4 பேரின் பெயர்களும் தெளிவாக சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து ஆடியோவை ஆதாரமாகக் கொண்டு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஜெயராமின் அம்மா ரேவதி புகாரளித்தார்.

துணை கமிஷனர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ், முதலில் மாயம் என்று வழக்கு பதிவு செய்தார். பின்னர் ஜெயராம் சகோதரி கொடுத்த ஆடியோ ஆதாரம் அடிப்படையில் போலீஸார் விசாரித்து கொலை வழக்கு பதிந்தனர். விசாரணையில் செல்போன் ஆடியோவில் கூறியதைப் போல ஜெயராம் கொலை செய்யப்பட்டது உண்மை எனத் தெரிந்தது. அதைக்கேட்டதும் ஜெயராமின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். பின்னர், ஜெயராமைக் கொலை செய்தவர்களை அழைத்துக்கொண்டு போலீஸார் கடற்கரை பகுதிக்குச் சென்றனர்.

``தாயின் தவறான நட்பு;  ஊரடங்கில் டிரைவரைக் கொலை செய்த மகன்" -மாங்காடு பகுதியில் நடந்த கொடூரம்

பின்னர் அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டியபோது ஜெயராம் சடலம் இருந்தது. இதையடுத்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக கணேஷ், சூர்யா, ஜோசப் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் கூறுகையில், ``கடந்த 25-ம் தேதி இரவு 10 மணியளவில் ஜெயராம், பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் கடற்கரைப் பகுதிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். கடற்கரையில் அமர்ந்த ஜெயராம், தன்னுடைய நண்பர்களை கஞ்சா வாங்க அனுப்பி வைத்துள்ளார். தனியாகக் கடற்கரையில் அமர்ந்திருந்தவர், தன்னுடைய மற்றொரு நண்பனான விக்கிக்கு செல்போனில் பேசி, கடற்கரைக்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கு விக்கி, நான் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜெயராம் சடலம் புதைக்கப்பட்ட கடற்கரை
ஜெயராம் சடலம் புதைக்கப்பட்ட கடற்கரை

இந்தச் சமயத்தில் கடற்கரையில் அமர்ந்து கணேஷ், சூர்யா, ஜோசப் உட்பட சிலர் மது அருந்தியுள்ளனர். அவர்கள், ஜெயராமுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஜெயராம், கஞ்சா சிகரெட் பிடித்துள்ளார். அதில் ஜெயராமுக்கும் கணேஷ் டீமுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணேஷ், மதுபாட்டிலை எடுத்து ஜெயராம் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்துள்ளார். பின்னர் கணேஷின் நண்பர்கள் ஜெயராமை கல்லால் தாக்கியுள்ளனர். உயிருக்குப் போராடிய ஜெயராமின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

கீழே விழுந்த ஜெயராம் பேன்ட் பாக்கெட்டிலிருந்த செல்போன், தானாக ஆன் ஆகி அதிலிருந்து அவர் கடைசியாகப் பேசிய நம்பருக்கு கால் (அழைப்பு) சென்றுள்ளது. அந்த நம்பர், ஜெயராமின் நண்பன் விக்கியுடையது. போனை எடுத்த விக்கி, ஹலோ என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயராம் எதுவும் பேசவில்லை. அதே சமயத்தில், `கொல்லுங்கடா, குழி தோண்டுடா' என்று கேட்டுள்ளது. அதைக்கேட்ட விக்கி, ஏதோ அசம்பாவித சம்பவம் நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அனைத்து உரையாடல்களையும் ரெக்கார்டு செய்துள்ளார்.

கொலை வழக்கில் கைதானவர்
கொலை வழக்கில் கைதானவர்

பின்னர், அந்தப் பதிவை ஜெயராமின் சகோதரிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரித்தபோதுதான் ஜெயராம் கொலை செய்யப்பட்டது உறுதியானது. அவரைக் கொலை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

ஊரடங்கு காலகட்டத்தில் வடசென்னையில் கஞ்சா விற்பனை எந்தவித தடையும் இன்றி நடப்பதை இந்தச் சம்பவம் மூலம் தெளிவாகத் தெரிகிறது. கஞ்சா கும்பலிடம் சிக்கிய ஜெயராம், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு