சென்னை, அம்பத்தூர் சிவானந்தா நகரைச் சேர்ந்தவர் இந்திரகுமார். இவரின் மகன்கள் லோகேஷ் (27), வெங்கடேஷ் (21). கடந்த 25-ம் தேதி வெங்கடேஷ் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``கடந்த வாரத்தில் நானும் என்னுடைய அண்ணன் லோகேஷ் என்கிற கார்த்திக்கும் அம்பத்தூரில் உள்ள தியேட்டரில் `பீஸ்ட்’ படம் பார்க்கச் சென்றோம். அப்போது அம்பத்தூர் அன்னை சத்தியா நகரைச் சேர்ந்த சீஸ், லாசர், சண்முகம், நரேந்திரன் ஆகிய நான்கு பேரும் படம் பார்க்க வந்திருந்தனர். பின்னர் படத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் வீட்டுக்கு திரும்பியபோது அம்பேத்கர் சிலை அருகே எங்களுக்கும் சீஸ் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது என்னுடைய அண்ணன் லோகேஷ், கத்தியை எடுத்து சீஸ் என்பவனின் கையில் வெட்டினான். இந்தச் சம்பவம் தொடர்பாக சீஸ் காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சீஸ், லாசர், சண்முகம், நரேந்திரன் ஆகியோருக்கும் எங்களுக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில், 25.4.2022-ம் தேதி, காலை 10:40 மணியளவில் நானும் என்னுடைய அண்ணன் லோகேஷும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, கலைவாணர் நகர் பி.வி.சிட்டி வானகரம் ரோடு பகுதியில் உள்ள எலெக்ட்ரிக்கல் சர்வீஸ் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த லாசர், சண்முகம், நரேந்திரன், சதீஷ், குற்றரசு, அப்பு ஆகியோர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் என்னையும் என் அண்ணனையும் வெளியில் வரும்படி கூப்பிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதனால் நானும் என்னுடைய அண்ணனும் அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவு செய்து கிழக்குப் பக்கமாக ஓட்டம் பிடித்தோம். அதைப் பார்த்த லாசர் எங்களைத் துரத்தி வந்து என்னுடைய அண்ணன் லோகேஷின் பின் தலையில் கத்தியால் வெட்டினான். அதன் பிறகு லாசருடன் வந்தவர்கள் என் அண்ணை வெட்டினார்கள். அதைப் பார்த்த நான், `லோகேஷை விட்டுவிடுங்கள்’ என்று கத்தினேன். உடனே அவர்கள் என்னை வெட்ட விரட்டினார்கள். அதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து தப்பி ஓடினேன். அந்தப் பகுதியில் உள்ள ஒரு கம்பெனிக்குள் நுழைந்து மறைந்துகொண்டேன். அவர்கள் சென்ற பிறகு என் அண்ணைச் சென்று பார்த்தேன். அவன் இறந்து கிடந்தான். லோகேஷைக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில், போலீஸார் கொலை செய்யப்பட்ட லோகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மல்லிகா, இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தார். கொலையாளிகளைப் பிடிக்க ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை கமிஷனர் மகேஷ் மேற்பார்வையில், அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராமசாமி, மல்லிகா ஆகியோர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில் திருவேற்காடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் லாசர் (19), சண்முகம் (19)., சதீஷ் (21), குற்றரசு (20), நரேந்திரன் (19). விஷ்ணு (20), தனசேகர் (18), மணிகண்டன் (19), சக்தி (19), 17 வயது சிறுவன் ஆகியோர் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஐந்து மணி நேரத்தில் போலீஸார் கொலையாளிகளைக் கைதுசெய்ததால் தனிப்படையினரை ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

இந்தக் கொலை குறித்து போலீஸார் கூறுகையில், ``புகாரளித்த வெங்கடேஷுக்கும், கைதுசெய்யப்பட்ட கும்பலுக்கும் செல்போனைப் பறித்த சம்பவத்தில் தகராறு இருந்துவந்துள்ளது. அந்தத் தகராறுதான் `பீஸ்ட்’ படம் பார்க்கச் சென்ற இடத்தில் மோதலாக வெடித்துள்ளது. இதில் தம்பிக்கு ஆதரவாக லோகேஷ், சீஸ் என்பவனைக் கத்தியால் வெட்டியுள்ளான். அதனால் ஆத்திரமடைந்த சீஸ் தரப்பினர், லோகேஷ், அவனின் தம்பி வெங்கடேஷ் ஆகியோரைக் கொலைசெய்ய திட்டமிட்டுள்ளனர். பட்டப்பகலிலேயே அவர்கள் வேலை பார்க்கும் கம்பெனிக்குச் சென்ற கும்பல் இருவரையும் விரட்டியுள்ளது. அதில் தம்பியின் கண்முன்னால் அண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். கொலைவெறித் தாக்குதலில் வெங்கடேஷ் தப்பிவிட்டான். இந்த வழக்கில் உடனடியாகக் குற்றவாளிகளைக் கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.