சென்னை, முகப்பேர் மேற்கு, ஒன்றாவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கலா (52). இந்தத் தம்பதியினருக்கு மூன்று மகன்கள. மூத்த மகன் ராசு, இரண்டாவது மகன் சந்திரன் என்கிற விக்கி (19), மூன்றாவது மகன் மணிகண்டன். மூத்த மகன் ராசுக்கு திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்குவரும் சந்திரன், குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர்மீது காவல் நிலையங்களில் வழக்குகளும் நிலுவையில் இருந்து வந்தன.

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி இரவு, ராசுவின் மகள், செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அதைப் பார்த்த சந்திரன், செல்போனை பறித்துள்ளார். அதனால் அழுத ராசுவின் மகள், குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக ராசுவுக்கும், சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராசு, தன்னுடைய தம்பி சந்திரனை அடித்துள்ளார். மேலும், பெல்ட்டால் சந்திரனின் கழுத்தை ராசு இறுக்கியுள்ளார். இதில் சந்திரன் மயங்கியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளனர். வீட்டுக்கு வந்த மருத்துவக் குழுவினர் சந்திரனை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சந்திரன் இறந்த தகவல் நொளம்பூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சந்திரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சந்திரனின் அம்மா கலா கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், ராசுவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``தம்பியைக் கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ராசு, தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் தம்பி சந்திரன், மதுவுக்கு அடிமையானவர். இந்தச் சூழலில்தான் செல்போனால் ராசுவுக்கும் சந்திரனுக்கும் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்."
தம்பியை அண்ணன் கொலைசெய்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.