Published:Updated:

காதல் திருமணத்துக்கு உதவி; முன்விரோதம்? - மதுரையில் இளைஞர் வெட்டிக்கொலை

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலருகே திருவிழா மண்டகப்படி முன்பாக நின்றுகொண்டிருந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

கொலை
கொலை

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இதற்காக இப்பகுதியில் மண்டகப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை சுவாமி வீதியுலாவைக் காண மாலை 6.30 மணியளவில் பக்தர்கள் மண்டகப்படிகளில் நின்றிருந்தனர்.

காவல்துறை
காவல்துறை

அப்போது அங்கே இருந்த ஒரு இளைஞர் ஒருவரை, டூவீலர்களில் வந்த 8 பேர்கொண்ட கும்பல் விரட்டி விரட்டி வெட்டியிருக்கிறது. பலத்தக் காயங்களுடன் கிடந்த இளைஞர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் பெயர் கோபால்சாமி என்பது தெரியவந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், மாற்றுத்திறனாளி பிரிவில் காவல்துறையில் பணிபெற்றவர், அவரின் தந்தை சந்திரன். சிறுவயதிலேயே கோபால்சாமி, தவறான சகவாசம் ஏற்பட்டதாகக் குடும்பத்தினர் கருதியிருக்கின்றனர். அவரது நன்மைக்காக குடும்பத்தினர், தல்லாகுளத்திலிருந்து புதூர் ஆத்திகுளத்துக்கு குடியேறினர். சந்திரனின் மறைவுக்குப்பிறகு வாரிசு அடிப்படையில் தாய் வெங்கடேஸ்வரிக்குப் பணி கிடைத்தது; மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிளார்க் பணி.

சம்பவம் நிகழ்ந்த இடம்
சம்பவம் நிகழ்ந்த இடம்

``நண்பர்களின் பழக்கத்தை விடமுடியாத கோபால்சாமி அடிக்கடி தல்லாகுளத்திலேயே நண்பர்களுடன் சுற்றியிருக்கிறார். மதிச்சியத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் திருமணம் செய்துகொள்ள தனது நண்பருக்குக் கோபால்சாமி உதவியதாகக் கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் உறவினர்களிடையே முன்விரோத உரசல்கள் இருந்திருக்கின்றன. இப்பகுதியில் நடந்த மாரியம்மன் கோயில் திருவிழாவில் முன்விரோதப் பிரச்னை முற்றியிருக்கிறது. சமயம் பார்த்துக் காத்திருந்தவர்கள் திட்டம்போட்டு சுற்றி வளைத்திருக்கிறார்கள்'' என்கின்றனர் அந்தப்பகுதி மக்கள்.

கோபால்சாமியை சிறுவயதிலிருந்து அறிந்திருந்த அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, ``பையன் இந்த ஏரியாவில இருக்கும்போது அடாவடிதான். ஏரியா மாறிப்போனவன், அங்கேயே இருந்திருந்தா நல்லா வாழ்ந்திருப்பான். வீட்டில சொல்லுவாங்க, இந்தப் பக்கம் வருவான்னு. கடைசியில அவனைக் கொன்ன செய்தி வரும்ன்னு நினைக்கலை” என்றார்.

தல்லாகுளம் காவல்துறையினர் கூறுகையில், `கோபால்சாமி மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கொலைக்குக் காரணம் முன்விரோதமா அல்லது வேறேதும் காரணம் இருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்திவருகிறோம். கொலைசெய்த கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்'' என்று தெரிவித்தனர்.

கொலை
கொலை

கோபால்சாமியின் நண்பர்களை இரவு முழுக்க வீடுவீடாகத் தேடிப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர், காவல்துறையினர். நகரில் போக்குவரத்து அதிகமுள்ள முக்கியப்பகுதியான தல்லாகுளத்தில், திருவிழா நடைபெறும் இரவு நேரத்தில் இந்தக் கொலை நடந்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.