Published:Updated:

கஞ்சா, போதை ஊசி, பழிக்குப்பழி! - அமைச்சர் உதவியாளரின் உறவினருக்கு நேர்ந்த துயரம்

போதை ஏறிய இளைஞர்கள் ஒருவருக்கொருவர் அவ்வப்போது அடிதடி, சண்டையில் ஈடுபடுவது வழக்கமாம்.

கொலை
கொலை

புதுக்கோட்டை அடப்பன்வயலைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரின் மகன் வினோத் சக்கரவர்த்தி (29). இவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரான அன்பானந்தத்தின் அக்கா மகன் ஆவார். வெளியூர் செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த வினோத் சக்கரவர்த்தியை நோட்டமிட்ட 4 பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டின் அருகே வைத்து வினோத் சக்கரவர்த்தியின் கழுத்து மற்றும் தலைப் பகுதிகளில் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே வினோத் உயிரிழந்தார்.

வினோத் சக்கரவர்த்தி
வினோத் சக்கரவர்த்தி

இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து வினோத் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸாருக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் கொலையில் வினோத் சக்கரவர்த்தியின் நண்பர்களுக்கு முக்கிய பங்கு இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பழிக்குப்பழியாக இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அடப்பன்வயல் பகுதியில் உள்ள இளைஞர்கள் பலரும் கடந்த சில வருடங்களாகவே கஞ்சா மற்றும் போதை ஊசிப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

போதை ஏறிய இளைஞர்கள் ஒருவருக்கொருவர் அவ்வப்போது அடிதடி, சண்டையில் ஈடுபடுவது வழக்கமாம். சில நேரங்களில் வெட்டுக்குத்து சம்பவங்களும் நடக்கும் என்கின்றனர். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தில் `மண்டை' கார்த்தி என்பவர் இறந்துபோனார். `மண்டை' கார்த்தியின் இறப்புக்குக் காரணமாக இருந்தவர்களைப் பழிக்குப்பழி கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட அவரின் நண்பர்கள், வினோத் சக்கரவர்த்தியைத் திட்டம்போட்டு கொலை செய்துள்ளனர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

`என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன்!'- ரத்தம் படிந்த கத்தியோடு காவல் நிலையத்துக்குச் சென்ற கணவன்

இதுபற்றி போலீஸாரிடம் விசாரித்தோம். "சங்குராஜ், பீர் ஆகிய இருவர்தான் கார்த்தியைக் கொலை செய்துள்ளனர். வினோத் சக்கரவர்த்தி இவர்களின் நெருங்கிய நண்பர். பீர், ஏற்கெனவே இறந்துவிட்டார். சங்குராஜ் காணாமல் போய்விட்டார். இந்த நிலையில், மண்டை கார்த்தி இறப்புக்கு இவர்களில் யாரையாவது கட்டாயம் பழிக்குப்பழி தீர்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் வினோத் சக்கரவர்த்தியைக் கொலை செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. அடப்பன்வயல் பகுதியில் போதைப் பொருள்கள் கிடைப்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொலை குறித்தும் தொடர் விசாரணை நடந்து வருகிறது. விரைவில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்கின்றனர்.