Published:Updated:

`எந்த ஏரியா பசங்க கெத்து?!' - கொலையில் முடிந்த புதுக்கோட்டை இளைஞர்களின் பகை

கொலை செய்யப்பட்ட சம்பத்குமார்
கொலை செய்யப்பட்ட சம்பத்குமார்

எந்த ஏரியா இளைஞர்கள் கெத்து என்று இளைஞர்களுக்குள் நடந்த போட்டி கொலையில் வந்து முடிந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் 35-ம் வீதியைச் சேர்ந்த தர்மராஜ் மகன் சம்பத்குமார் (23). 36-ம் வீதி வழியாக வீட்டுக்குச் சென்றபோது, 10 பேர் கொண்ட கும்பலால் தைலமரக் காட்டுக்குள் கடத்திச் செல்லப்பட்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி தகவலறிந்த டவுன் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இது தொடர்பாகத் தகவல் கிடைத்த மாவட்டக் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரித்ததுடன் தனிப்படை அமைத்து கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டார்.

கொலை செய்யப்பட்ட சம்பத்குமார்
கொலை செய்யப்பட்ட சம்பத்குமார்

இதையடுத்து இதுபற்றி கணேஷ் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை போலீஸார் முடுக்கிவிட்டனர். சம்பத்குமாரின் நண்பர்கள் கொடுத்த புகாரின் பேரில், வண்டிப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் (29), வினோத் (22), விஜய் (19), ஸ்ரீகாந்த் (19), மச்சுவாடியைச் சேர்ந்த கார்த்திக் (22), ஸ்ரீதர் (22) ஆகியோரைக் கைது விசாரணை நடத்தியபோது கொலைக்கான காரணம் குறித்து தெரியவந்தது.

போலீஸார் விசாரணையில், கடந்த மாதம் காமராஜபுரத்தில் வைத்து காமராஜபுரம் இளைஞர்கள் சிலருக்கும் வண்டிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே எந்த ஏரியா இளைஞர்கள் கெத்து என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. அப்போது, இருதரப்பு இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறில் முடிந்துள்ளது. இதில், காமராஜபுரம் இளைஞர்கள் தான் எப்போதும் கெத்து என்று கூறி சம்பத்குமார், வண்டிப்பேட்டை இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட சம்பத்குமார்
கொலை செய்யப்பட்ட சம்பத்குமார்

இதுகுறித்த அடிதடி வழக்கு கணேஷ் நகர் போலீஸில் நிலுவையில் உள்ளது. இதற்கு பழிக்குபழி தீர்க்கும் வகையில் வண்டிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி நண்பர்கள் இல்லாத நேரத்தில் சம்பத்குமாரை வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றது தெரியவந்தது. எந்த ஏரியா இளைஞர்கள் கெத்து என்று இளைஞர்களுக்குள் நடந்த போட்டி கொலையில் வந்து முடிந்துள்ளது. கெத்து காட்டுகிறோம் என்று கூறி பரிதாபமாக உயிரிழக்கும் இளைஞர்களை எண்ணி பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு