Published:Updated:

`வாயால் கெட்ட டைல்ஸ் தொழிலாளி; கொலையில் முடிந்த நட்பு!' -போதையில் நடந்த சென்னை கொடூரம்

கட்டடத் தொழிலாளி  சிம்சன்
கட்டடத் தொழிலாளி சிம்சன்

``எனக்கும் அவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். என்னைக் கொலை செய்வதாக அவன் கூறினான். அதற்குள் நான் முந்திக்கொண்டேன்" என்று கட்டடத் தொழிலாளி போலீஸாரிடம் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, ஸ்ரீ ராகவா நகரைச் சேர்ந்தவர் முனியன். இவரின் மகன் முரளி (25). டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. இவர், சென்னை மதுரவாயல், அய்யப்ப நகர், முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அதே வீட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிம்சன் (27) என்பவரும் தங்கியிருந்தார். இவரும் டைல்ஸ் ஒட்டும் வேலையைச் செய்து வந்தார்.

கொலை செய்யப்பட்ட முரளி
கொலை செய்யப்பட்ட முரளி

முரளியும் சிம்சனும் தங்கியிருந்த வீட்டில் கட்டட வேலை செய்துவரும் அரவிந்தன், சுப்பிரமணி ஆகியோர் தங்கியிருந்தனர். இவர்கள் நான்கு பேரும் நண்பர்கள். முரளிக்கும் சிம்சனுக்கும் திருமணமாகவில்லை. காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் இவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

கடந்த 14-ம் தேதி சிம்சனும் முரளியும் நண்பர்களோடு மதுஅருந்தியுள்ளனர். பின்னர் அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர். 15-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் முரளி, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் தலையில் கல்லைப்போட்டு யாரோ கொலை செய்திருந்தனர். வீட்டில் சிம்சனும் மாயமாகியிருந்தார். முரளி இறந்து கிடந்ததைப் பார்த்த அவரின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

`தவறான நட்பு; 31 இடங்களில் கத்திக்குத்து!' - தடம் மாறிய கேரளப் பெண் கொடூரக் கொலை

உடனடியாக மதுரவாயல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், தலைமைக் காவலர் துரை மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் முரளி கொலைக்கான காரணம் தெரியவந்தது. முரளியை அவரின் நண்பர் சிம்சன் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மதுரவாயல் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில்தான் முரளி, கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கியிருந்தார். வேப்பம்பட்டு பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியதால் முரளியின் குடும்பத்தினர் அங்கு குடியேறினர். ஆனால் முரளிக்கு மதுரவாயல் பகுதியில் வேலை என்பதால் அவர் மட்டும் மதுரவாயலில் தங்கியிருந்தார்.

representational image
representational image

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சிம்சன், முரளி தங்கியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார். வெவ்வேறு இடங்களில் அரவிந்தன், சுப்பிரமணி, சிம்சன், முரளி ஆகிய 4 பேரும் வேலை பார்த்தாலும் நண்பர்களாகப் பழகியுள்ளனர். இதில் முரளிக்கும் சிம்சனுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. கடந்த 12.12.2019-ல் முரளியின் மணி பர்ஸ் மாயமாகியுள்ளது. அதில் 1,500 ரூபாயும் ஏ.டி.எம் கார்டும் இருந்துள்ளது.

அதை சிம்சன் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் முரளி அவரிடம் கேட்டுள்ளார். இதனால் சிம்சனுக்கும் முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரவிந்தன், சுப்பிரமணி ஆகியோர் சமரசப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் 14-ம் தேதி 4 பேரும் மது அருந்தியபோதும் சிம்சனுக்கும் முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முரளி, `இது என்னுடைய ஏரியா. வேப்பம்பட்டிலிருந்து ஆட்களை அழைத்து வந்து உன்னைத் தீர்த்துக் கட்டிவிடுவேன்' என்று போதையில் கூறியுள்ளார்.

`அரசியலைத் தேர்வு செய்தது ஏன்?!' -தஞ்சையில் மனம்திறந்த ஜீவஜோதி

அதற்கு, சிம்சன், `உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் நாஞ்சில் நாட்டுக்காரன். எனக்கும் ஆள் இருக்கிறது. உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்' என்று கூறியுள்ளார். அதன்பிறகு அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர். ஆனால் சிம்சன் மட்டும் தூங்கவில்லை. ஒருவேளை முரளி கூறியதுபோல நம்மை ஆள் வைத்து அவன் கொலை செய்துவிட்டால் என்ன செய்வது என யோசித்துக்கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து முரளியைக் கொலை செய்ய சிம்சன் திட்டமிட்டுள்ளார்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த முரளியின் அருகில் சென்று தலையில் கல்லைப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முரளி இறந்துவிட்டார். பின்னர், அங்கிருந்து சொந்த ஊருக்குத் தப்பிச் செல்ல சிம்சன் முடிவு செய்தார். தன்னுடன் தங்கியிருந்த சுப்பிரமணியிடம் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டும். அதனால் என்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் விட்டுவிடும்படி கூறியுள்ளார்.

மாதிரி படம்
மாதிரி படம்

இதைப் பற்றி எதுவும் தெரியாத சுப்பிரமணியன், சிம்சனை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும் சிம்சனைக் கைது செய்துள்ளோம். முரளியைக் கொலை செய்யப் பயன்படுத்திய கல்லையும் கைப்பற்றியுள்ளோம். முரளியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். போதையில் நடந்த தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளது" என்றனர்.

போலீஸாரிடம் சிம்சன் அளித்த தகவலில், ``என்னைக் கொலை செய்வதாக முரளி கூறினான். நான் முந்திக்கொண்டு அவனைக் கொலை செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``போதையிலிருந்த முரளியும் சிம்சனும் வீரவசனம் பேசியுள்ளனர். அதை உண்மையென நம்பிய சிம்சன், நண்பன் என்றுகூட பார்க்காமல் முரளியைக் கொலை செய்துள்ளார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு