Published:Updated:

`ஓசியில குடிக்கக் கூப்பிட்டா 2 குவார்ட்டர் கேட்குதா?!' -கிண்டலடித்த இளைஞரைக் கொன்ற நண்பர்கள்

நானும் எனக்குத் தெரிந்த ஆட்டோக்காரர் ஒருவர் மூலம் செல்போனை விற்றுக் கொடுப்பதாகச் சொன்னேன். பிறகு, அந்த ஆட்டோக்காரரிடம் செல்போனை விற்று ரூ.1,500 வாங்கிக் கொடுத்தேன்.

Representational image
Representational image

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே மர்மமான முறையில் இறந்த பெயின்டர் கொலைவழக்கில் நண்பர்களே அடித்துக் கொன்றது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகமாகக் குடிப்பதாகக் கிண்டல் செய்ததால் போதையில் நண்பனை அடித்துக்கொன்றதாக கைதானவர்கள் கூறியுள்ளனர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

கூடுவாஞ்சேரி, தைலாவரம் டாஸ்மாக் கடையின் அருகே உள்ள கால்வாயில் கடந்த 12-ந்தேதி ரத்தக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்தவரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அவர் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெயின்டர் ஜெகன் என்பது தெரியவந்தது. இந்தநிலையில் ஜெகனை அடித்து கொலை செய்ததாக கோவளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் சிதம்பரம் கோர்ட்டில் சரணடைந்தார். சரவணன் அளித்த தகவலின் அடிப்படையில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி (எ) ஜோசப் என்பவரை காவல்துறையினர் 14-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஜெகன் மரணம் தொடர்பாக போலீஸாரிடம் பேசிய ஜோசப், ``சரவணனும் இறந்துபோன ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 11-ந்தேதி இரவு கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தனர். நானும் அங்கு நின்றிருந்தேன். என்னிடம் பேசிய சரவணன், `நானும் ஜெகனும் பர்வதமலை கோயிலுக்குப் போகிறோம். செலவுக்குப் பணம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அதனால அவருடைய செல்போனை விற்றுக் கொடுக்க முடியுமா?' எனக் கேட்டார்.

நானும் எனக்குத் தெரிந்த ஆட்டோக்காரர் ஒருவர் மூலம் விற்றுக் கொடுப்பதாகச் சொன்னேன். பிறகு அந்த ஆட்டோக்காரரிடம் செல்போனை விற்று ரூ.1,500 வாங்கிக்கொடுத்தேன். அதன்பிறகு, `டாஸ்மாக் கடைக்குப் போகப் போகிறேன், ஒரு நூறு ரூபாய் கிடைக்குமா?' எனக் கேட்டேன். உனக்கு சரக்குதானே வேணும், நான் வாங்கித் தர்றேன் எனக் கூறிவிட்டு, தாராபுரம் பக்கத்துல இருக்குற டாஸ்மாக் கடைக்குள் போனோம்.

Representational image
Representational image

எங்களுக்குத் தேவையான மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்து ஒரு இடத்தில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு குவாட்டர் முடித்துவிட்டு இரண்டாவது பாட்டிலை எடுத்துக்குடிக்க ஆரம்பித்தேன். இதைப் பார்த்த ஜெகன், `ஓசியில குடிக்க வந்தா ஒரு குவாட்டரோடு நிறுத்திக்கணும்… நீ ரெண்டு குவாட்டர் குடிக்கற…கட்டையா இருந்துகிட்டு பண்ற வேலையைப் பாரு…' என என்னைப் பார்த்துக் கிண்டல் செய்தார்.

எனக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து ஜெகன் தலையில் அடித்தேன். கடுப்பான சரவணனும், `உதவி செய்ய வந்தவனையே கிண்டல் செய்யலாமா?' எனக் கையிலிருந்த பாட்டிலால் ஜெகன் தலையில் ஓங்கி அடித்தார். இதில், அவர் இறந்துவிட்டார்" எனக் கூறியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.