Published:Updated:

`கைப்பை எங்கே?'- ஆள் மாறாட்டத்தால் கேரள இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

திருடியவரின் அங்க அடையாளங்கள் குறித்து முழுமையாகக் கேட்ட ஆட்டோ டிரைவர்கள் அவரைப் பற்றித் தங்களுக்குத் தெரியும் எனக் கூறியுள்ளனர்.

இளைஞரைத் தாக்கியதாக வெளியான காட்சிகள்
இளைஞரைத் தாக்கியதாக வெளியான காட்சிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த திருவல்லம் பகுதியில் வயலில் இளைஞர் ஒருவர் கிடப்பதாகவும், அவரை நாய்கள் கடித்துக் குதறிக்கொண்டிருப்பதாகவும் போலீஸுக்கு சிலர் தகவல் சொல்லியிருக்கிறார்கள். விரைந்து வந்த போலீஸார் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அவரது கால் உடைந்த நிலையில் இருப்பதாகவும், பிறப்புறுப்பில் சூடு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டவர்கள்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் அஜீஸ் என்ற இளைஞர் என்றும், அவரை ஐந்துபேர் சேர்ந்து அடித்துக் கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதுகுறித்து திருவல்லம் போலீஸார் கூறுகையில், ``திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் மலப்புறம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த வியாழக்கிழமை தூங்கியிருக்கிறார்.

தூக்கம் கலைந்து எழுந்த அவர் தனது கைப்பையை ஒருவர் திருடிச் சென்றதாக ரயில் நிலையத்திற்கு வெளியில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் கூறியிருக்கிறார். மேலும், தனது கைப்பையில் ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் பாஸ்போர்ட் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது தனது கைப்பையைத் திருடியவரின் அங்க அடையாளங்கள் சிலவற்றையும் கூறியுள்ளார்.

திருடியவரின் அங்க அடையாளங்கள் குறித்து முழுமையாகக் கேட்ட ஆட்டோ டிரைவர்கள் அவரைப் பற்றித் தங்களுக்குத் தெரியும் எனக் கூறியுள்ளனர். மூன்று ஆட்டோ டிரைவர்கள் உட்பட ஐந்துபேர் சேர்ந்து விழிஞ்ஞம் முட்டக்காடு பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பவரைத் தாக்கி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.

பின்னர் திருவல்லம் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து அவரை அடித்து உதைத்து கைப்பை பற்றி விசாரித்துள்ளனர். மேலும் வெட்டுக்கத்தியை நெருப்பில் பழுக்கவைத்து பிறப்புறுப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் சூடு வைத்துள்ளனர். குற்றுயிரான நிலையில் அவரை தூக்கி வயல்வெளியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை அஜீஸை ஆட்டோ டிரைவர்கள் தாக்கி ஆட்டோவில் ஏற்றிச் செல்வதை உள்ளூர் வாசிகள் மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் ஐந்துபேரை கைது செய்துள்ளோம்" என்றனர்.

இளைஞரைத் தாக்கியதாக வெளியான காட்சிகள்
இளைஞரைத் தாக்கியதாக வெளியான காட்சிகள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடையில் உணவு திருடியதாக வயநாட்டைச் சேர்ந்த மது என்ற ஆதிவாசி இளைஞரை சிலர் கட்டிவைத்து அடித்துக்கொன்றனர். அந்தச் சம்பவம் போன்று கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.