Published:Updated:

தலைக்கேறிய போதை; முற்றிய வாக்குவாதம்; நண்பனை ஓட ஓட வெட்டிக் கொன்ற இளைஞர்!

நண்பனைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த போதை ஆசாமியை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் ஜெ.ஜெ.நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (31). திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். முருகனின் நண்பர் சுபாஷ் சந்திரபோஸ் என்ற இளைஞரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய இருவரும் பூண்டி ஏரிக்கரை சுற்றுச்சுவரின்மீது அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையில் இருவருக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றி இருவரும் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இருவரையும் பிரித்துச் சமாதானப்படுத்தி, தனித் தனியே வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

சென்னை: நண்பன் செய்த துரோகம் - கொலை செய்த ஆட்டோ டிரைவர்!
புல்லரம்பாக்கம் காவல் நிலையம்
புல்லரம்பாக்கம் காவல் நிலையம்

முருகன் தனது வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், சுபாஷ் மட்டும் ஆத்திரம் தணியாமல் வீதிகளில் பித்துப்பிடித்தவர்போல் சுற்றித் திரிந்ததாகச் சொல்கிறார்கள். முருகன் தன்னை அவதூறாகப் பேசித் தாக்கியதால், கடும் கோபத்திலிருந்த சுபாஷ் முருகனின் வீட்டுக்குச் சென்றவர், சமாதானம் பேசுவதுபோல் அவரைத் தெருவுக்கு அழைத்திருக்கிறார். நண்பனை நம்பி முருகனும் தெருமுனைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, சுபாஷ்தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து முருகனைச் சரமாரியாகக் தாக்கியிருக்கிறார். அதைச் சற்றும் எதிர்பாராத முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்து, எழுந்து ஓடியிருக்கிறார். ஆனால், அப்போதும் ஆத்திரம் தணியாத சுபாஷ் விரட்டிச் சென்று முருகனின் தலை, கழுத்து பகுதிகளில் பலமாக வெட்டியிருக்கிறார். அதில் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார்.

ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலைச் சம்பவம் குறித்து அந்தப் பகுதி மக்கள் உடனடியாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதைக் கண்டு பயந்துபோன சுபாஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த புல்லரம்பாக்கம் போலீஸார், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து சுபாஷைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் நேற்று காலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரைக் கைதுசெய்த போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு