Published:Updated:

`கல்யாணம் பண்ணா அந்த பொண்ணோடதான்!' -கே.வி.குப்பத்துக்கு 5 மணிநேர அதிர்ச்சி கொடுத்த இளைஞர்

செல்போன் டவர்
செல்போன் டவர்

காதலியைத் திருமணம் செய்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், கே.வி.குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுமார் 100 அடி உயரமுடைய செல்போன் டவரில், இளைஞர் ஒருவர் திடீரென ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்ததும், கே.வி.குப்பம் போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்தனர். டவரின் மேலிருந்த இளைஞர் கீழே இறங்க மறுத்தார். போலீஸார் பக்குவமாகப் பேசித் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் இளைஞரைப் பத்திரமாக டவரிலிருந்து கீழே இறக்கினர்.

ராஜபாண்டியன்
ராஜபாண்டியன்

அப்போது, அந்த இளைஞர் திடீரென மயக்கமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். விசாரணையில் அவர், நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜபாண்டியன் (24) என்பது தெரியவந்தது. ஓராண்டுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜபாண்டியன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அந்த மருத்துவமனையில், கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நர்ஸாக பணிபுரிந்துள்ளார்.

அந்தப் பெண்ணின் மீது ராஜபாண்டியன் காதல் வயப்பட்டுள்ளார். அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய ராஜபாண்டியன் தன் பெற்றோரை அந்தப் பெண்ணின் வீட்டுக்கே அழைத்துச் சென்று பெண் கேட்டுள்ளார். ராஜபாண்டியனை அந்தப் பெண்ணின் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த ராஜபாண்டியன் காதலியின் வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார்.

செல்போன் டவர்
செல்போன் டவர்

அதன் பின்னரே, காதலியைத் திருமணம் செய்து வைக்கக்கோரி டவரில் ஏறி போராட்டம் செய்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜபாண்டியனுக்கு சுய நினைவு திரும்பிய உடன் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். அவர் மீது இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

காதல் விவகாரம் என்பதால் காவல்துறையினரும் அவர் மீது கரிசனம் காட்டுகிறார்கள். இந்தச் சம்பவத்தால், 5 மணிநேரத்துக்கு மேலாக கே.வி.குப்பத்தில் பரபரப்பு நிலவியது.

அடுத்த கட்டுரைக்கு