Published:Updated:

மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம்! - உறவினர்கள் போராட்டம்

ரமேஷ்
ரமேஷ்

நேற்று முன்தினம் இரவு ரமேஷை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் காலை வரை அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் காவல் நிலையத்துக்குச் சென்று கேட்டிருக்கிறார்கள். அங்கே ரமேஷை அனுப்பிவைத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற வாலிபர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தால் மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் பொதுமக்கள் `காவல்துறையினரைக் கைது செய்ய வேண்டும்’ என்று போராட்டம் நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை
மதுரை

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கன்னியப்பன்-பாண்டியம்மாள் தம்பதியர். இவர்களுக்கு இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ் என மூன்று மகன்கள். இவர்கள் வாழைத்தோப்பு பகுதியிலுள்ள தோட்டத்து வீட்டில் வசித்துவந்தார்கள்.

கடந்த மாதம், இதயக்கனி அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், மைனர் பெண்ணை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் சாப்டூர் காவல்துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

ரமேஷ்
ரமேஷ்

இந்த வழக்கில் விசாரணைக்காக இதயக்கனியின் சகோதரர்கள் சந்தோஷ் மற்றும் ரமேஷை காவல்துறையினர் அடிக்கடி அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு திரும்ப வீட்டில் விட்டுவிட்டுச் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு ரமேஷை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் காலை வரை அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று கேட்டிருக்கிறார்கள். போலீஸார் ரமேஷை அனுப்பிவைத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

சாத்தான்குளம்: 17, 13 இடங்களில் கடுமையான காயங்கள்! அதிரவைத்த உடற்கூராய்வு அறிக்கை

இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகேயுள்ள மரத்தில் ரமேஷ் தூக்கில் தொங்கியதைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். உடனே ஊர் மக்கள் திரண்டு ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணையின்போது போலீஸார் ரமேஷை அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரமேஷ்
ரமேஷ்

இதனால் பேரையூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சாத்தான்குளத்தில் தந்தை மகனை காவல்துறையினர் அடித்துக் கொன்றதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அதேபோல் இங்கும் காவல்துறையினர் தாக்குதலில் ரமேஷ் மரணமடைந்ததாகக் கூறிய உறவினர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி சஜித்குமார் தலைமையிலான காவல்துறையினர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 174 பிரிவின்படி வழக்கு பதிவு செய்து ரமேஷின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தது காவல்துறை. இந்த மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு