Published:Updated:

`ஐ.டி-யில் வேலை...போலி ஆணை...3 மாதம் சம்பளம்!'- 25 இளைஞர்களிடம் ரூ.80 லட்சம் சுருட்டிய வக்கீல்

பி.ஆண்டனிராஜ்

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களிடம் எண்பது லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற சண்முகசுந்தரம்
தீக்குளிக்க முயன்ற சண்முகசுந்தரம்

பாளையங்கோட்டை இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 21 வயது நிரம்பிய பட்டதாரி இளைஞரான இவர் அரசு வேலைக்குத் தயாராகி வந்தார். அந்தச் சமயத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகந்தன் மற்றும் அவரது பெண் நண்பரான டியோபுல் ஆகிய இருவரும் அரசுப் பணி வாங்கித் தருவதாகத் தெரிவித்துள்ளனர்.

மண்ணெண்ணெய் ஊற்றியதைக் கழுவும் போலீஸாரும் தீயணைப்புப் படையினரும்
மண்ணெண்ணெய் ஊற்றியதைக் கழுவும் போலீஸாரும் தீயணைப்புப் படையினரும்

அதை நம்பிய சண்முகசுந்தரம் அவர்களிடம் 10 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இது தவிர அவரது நண்பர்களான ராஜா, சுந்தர்சிங், ஆறுமுக நயினார் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் என ஏராளமானோர் பணம் கொடுத்துள்ளனர். சண்முகசுந்தரத்தைத் தூத்துக்குடி அலுவலகத்துக்கு அழைத்த சுகந்தனும் டியோபுல் என்பவரும் வருமானவரி அலுவலகத்தில் உதவியாளர் பணிக்கான ஆணையை வழங்கியிருக்கிறார்கள்.

வருமான வரி உதவியாளர் பணிக்கான ஆணையைப் போலியாக அச்சடித்துக் கொடுத்ததுடன் அவருக்கு மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 சம்பளமாகவும் வழங்கியிருக்கிறார்கள். அதைக் காட்டியே மேலும் பலரிடம் பணல் வசூலித்திருக்கிறார்கள். மூன்று மாதத்துக்குப் பின்னர், சண்முகசுந்தரத்துக்கு ஊதியம் வழங்காமல் பணியைவிட்டு தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்கள்.

Vikatan
வருமானவரித் துறையில் உதவியாளர் பணிக்கான போலி நியமன ஆணை வழங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட இளைஞர் சண்முகசுந்தரம்

நிரந்தரப் பணியாணை சில வாரங்களில் வந்துசேரும் எனத் தெரிவித்த நிலையில், பல மாதங்களுக்குப் பின்பும் பணிக்கான ஆணை வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த அவர் சுகந்தன் மற்றும் டியோபுல் ஆகியோரைத் தொடர்புகொண்டபோது செல் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சண்முகசுந்தரம், ஏற்கெனவே பலரிடம் பணம் வாங்கிக் கொடுத்துள்ளார். அதனால் அவர்கள் அனைவரும் சண்முகசுந்தரத்திடம் வேலை அல்லது பணத்தைக் கொடுக்குமாறு நிர்பந்தித்துள்ளனர். அதில் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் நேற்று வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதை அக்கம் பக்கத்தினர் தடுத்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பில் சண்முகசுந்தரம்
போலீஸ் பாதுகாப்பில் சண்முகசுந்தரம்

இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சண்முகசுந்தரம் பாதிக்கப்பட்ட சிலரையும் உடன் அழைத்து வந்துள்ளார். வளாகத்துக்குள் வந்த அவர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அவரை மீட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

Vikatan

ஏற்கெனவே, 2017-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாகச் செங்கோட்டை காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

தீக்குளிக்க முயன்ற இளைஞர் சண்முகசுந்தரம்
தீக்குளிக்க முயன்ற இளைஞர் சண்முகசுந்தரம்

அதன் பின்னர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வழிகள் அடைக்கப்பட்டு, பிரதான நுழைவுவாயில் மூலமாக மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினரின் பலத்த சோதனைக்குப் பின்பே பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முடியும். அதை எல்லாம் மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் தீக்குளிக்க நடந்த முயற்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.