Published:Updated:

அரிவாளோடு பாய்ந்த இளைஞர்; தலைதெறிக்க ஓடிய வி.ஏ.ஓ! - கொரோனா ஸ்டிக்கரால் நேர்ந்த விபரீதம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வீட்டில் `தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற ஸ்டிக்கர் ஒட்டச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் மே மாதம் 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

அதன் ஒருபகுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களின் வீடுகளில் `தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்று சுகாதாரத்துறை மூலம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையின் வழிகாட்டலில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அரிவாள்
அரிவாள்

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்களால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கடலூர் திரும்பிய 107 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்திருக்கும் சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர். அதனால் அவரது வீட்டுக்கு கிராம நிர்வாக அலுவலரான சிவக்குமார் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காகச் சென்றார்.

சம்பவ இடத்தில் காவல்துறை விசாரணை
சம்பவ இடத்தில் காவல்துறை விசாரணை

ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டவரின் மனைவி மற்றும் மகனிடம் டிராவல் ஹிஸ்ட்ரியை கேட்டு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது தொற்று ஏற்பட்டவரின் 22 வயது மகன் முருகன் வீட்டுக்குள் சென்று, கரும்பு வெட்டும் அரிவாளை துண்டுக்குள் மறைத்து எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். எதற்கு அரிவாள் என்று அவரின் தாய் கேட்டுக்கொண்டிருக்கும்போதே கிராம நிர்வாக அலுவலரை நோக்கி அரிவாளை வீசினார் முருகன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அதைப் பார்த்துவிட்ட கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், உயிர் பயத்துடன் அங்கிருந்து தப்பித்து சாலையில் ஓடத் தொடங்கினார். ஆனால், அரிவாளோடு கொலை வெறியுடன் அவரை விடாமல் துரத்தினார் முருகன். சுமார் 100 மீட்டர் தூரம்வரை தலைதெறிக்க ஓடிய கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், அங்கு புதியதாகக் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் சுவர் மீது ஏறி மறுபக்கம் குதித்திருக்கிறார்.

வீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
வீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்

அதேநேரத்தில் ஊர்மக்களும் முருகனை விரட்டிவந்ததால் அவர் அங்கிருந்து ஓடி தப்பித்துவிட்டார். அதையடுத்து ஊர்மக்களும், அவருடன் வந்த அதிகாரிகளும் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய முருகனைத் தேடி வருகின்றனர்.

சிறுமுளை கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரிடம் பேசினோம். ``கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து திரும்பியவர்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் குடும்ப விவரங்கள் மற்றும் டிராவல் ஹிஸ்ட்ரியை சேகரிப்பதுடன், சுகாதாரத்துறையின் உத்தரவின்படி அந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்துவருகிறோம்.

கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்
கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்

அப்படித்தான் அந்த வீட்டிலும் விசாரித்து எழுதிக்கிட்டிருந்தேன். அவர்கள் பயந்துபோய் இருந்ததால், `கவலைப்படாதீங்கம்மா உங்க வீட்டுக்காரருக்கு சீக்கிரம் சரியாய்ப் போயிடும். நீங்களும் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பா இருங்க'னு சொல்லிக்கிட்டிருந்தோம்.

அப்போது வீட்டுக்குள்ள போயி அரிவாளோட வந்த அந்தப் பையன்கிட்ட அந்த அம்மா, `எதுக்குடா இப்போ அரிவாள்'னு கேட்டதுக்கு, `நுங்கு வெட்டப் போறேன்'னு சொன்னான். உடனே துண்டுல மறைச்சி வெச்சிருந்த அரிவாளால என்னை வெட்ட முயற்சி செய்தான். உடனே அங்கிருந்து தப்பிச்சு நான் ஓட ஆரம்பிச்சேன். ஆனா விடாம என்னைத் துரத்திக்கிட்டே வந்தான்.

சிறுமுளை கிராமம்
சிறுமுளை கிராமம்

7 முறை என்கிட்ட வந்து வெட்டறதுக்கு முயற்சி செய்தான். ஆனால், நான் சுவர் ஏறிக் குதிச்சி தப்பிச்சிட்டேன். பொதுமக்கள் நல்லதுக்காகத்தான் எங்க உயிரைப் பணயம் வெச்சி, குடும்பத்தைப் பத்திக்கூட கவலைப்படாம வேலை செஞ்சிக்கிட்டிருக்கோம். ஆனா மக்கள் அதைப் புரிஞ்சுக்க மாட்றாங்கனு நினைக்கும்போதுதான் வேதனையா இருக்கு. வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை சார்” என்றார் விரக்தியுடன்.

`கொரோனா குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு!’ -வி.ஏ.ஓ-வை தேடும் திருவண்ணாமலை காவல்துறை
அடுத்த கட்டுரைக்கு