Published:Updated:

`உங்க பூனையை வாங்குகிறேன், அப்ளிகேஷனை டவுன்லோடு பண்ணுங்க!'-ஆன்லைனில் 1 லட்சத்தை இழந்த மாணவர்

தெ.சு.கவுதமன்

பணப்பரிமாற்றம் செய்யும்போது அவருக்குப் பணம் கிடைப்பதற்குப் பதிலாக, பணம் அவரது வங்கிக்கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்து பரிமாற்றத்தின்மூலம் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டிருக்கிறது.

cat
cat

ஆன்லைன் மூலமாக பூனையை விற்க முயன்றபோது தன்னிடம் 1 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக மும்பையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

Online
Online

மும்பை அந்தேரி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவர், தன்வசமுள்ள அழகிய பூனையை விற்பதற்காக ஓஎல்எக்ஸ் ஆன்லைன் தளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அந்தப் பூனையை வாங்குவதற்காக ஒருவர் தொடர்புகொண்டிருக்கிறார். பூனையை வாங்குவதற்காக முன்பணம் கொடுப்பதற்கு ஓர் இ-வாலட் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யும்படி கூறியிருக்கிறார்.

அதன்படி பணப்பரிமாற்றம் செய்யும்போது அவருக்குப் பணம் கிடைப்பதற்குப் பதிலாக, பணம் அவரது வங்கிக்கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்து பரிமாற்றத்தின்மூலம் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டிருக்கிறது. அதன்பின்புதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் 419 (ஆள்மாறாட்டம்), 420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ஏமாற்றியவரைத் தேடி வருகிறார்கள்.

cat
cat

இதில் புதிய திருப்பமாக, புகார் அளித்தவரும் தற்போது சட்டச்சிக்கலில் சிக்கியுள்ளார். விலங்குகள் வதைத் தடுப்புச்சட்டத்தின்படி ஆன்லைனில் விலங்குகளை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலமாக பூனையை விற்பனை செய்ய முயன்ற குற்றத்துக்காக புகார் அளித்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவெடுத்துள்ளனர். இப்போது புகார் அளித்தவருக்கு திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை!