Published:Updated:

வேலையில்லா விரக்தி... யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிப்பு... அதிர வைத்த கர்நாடக வாலிபர்!

வெடிகுண்டு வைத்து பிடிபட்ட ஆதித்யா ராவ்
News
வெடிகுண்டு வைத்து பிடிபட்ட ஆதித்யா ராவ்

வேலை கிடைக்காத விரக்தியில் மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்தாகவும் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாகவும் கைதானவர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:

வேலையில்லா விரக்தி... யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிப்பு... அதிர வைத்த கர்நாடக வாலிபர்!

வேலை கிடைக்காத விரக்தியில் மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்தாகவும் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாகவும் கைதானவர் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு வைத்து பிடிபட்ட ஆதித்யா ராவ்
News
வெடிகுண்டு வைத்து பிடிபட்ட ஆதித்யா ராவ்

யூடியூப்பில் அத்தனை விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன. கூகுள் போலவே என்ன தகவல்கள் வேண்டுமானாலும் யூடியூப் நிறுவனமும் காட்சிப் பொருள்களுடன் தரும். யூடியூப் பார்த்து சமையல் செய்த நிலை மாறி பிரசவம் பார்ப்பது, பிரசவத்தை வீடியோ எடுத்து யூடியூப்பில் அப்லோட் செய்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை, கர்நாடகாவில் உள்ள மங்களூரு விமான நிலையத்தின் டிக்கெட் கவுன்டர் அருகில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. விமான நிலையபாதுகாப்பு அதிகாரிகளால் அந்தப் பை கைப்பற்றப்பட்டது. பையை சோதனையிட்ட போது, உள்ளே வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர், மங்களூரூவில் உள்ள கெஞ்சாரி மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்களால் அந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டது.

வெடிக்க வைக்கப்பட்ட குண்டு
வெடிக்க வைக்கப்பட்ட குண்டு

வெடிகுண்டு வைத்த நபரை பிடிக்க, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். திங்கள் கிழமை காலையில், விமான நிலையத்துக்கு ஆட்டோவில் வந்த நபர் ஒருவர், அந்த பையை அங்கே விட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து , இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபரை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மங்களூரூ சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை மங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்ததாக 36 வயது நிரம்பிய ஆதித்யா ராவ் என்பவர் பெங்களூரு போலீசில் சரணடைந்து உள்ளார். விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அவர் மீது வெடிப்பொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மணிப்பால் நகரைச் சேர்ந்த ஆதித்யா ராவ் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படித்த பட்டதாரி. பெங்களூரு விமான நிலையத்தில், காவலர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார் அவரிடத்தில், போதிய ஆவணங்கள் இல்லாததால், வேலை மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக ஆதித்யாராவ் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2012-ம் ஆண்டு பெங்களூருவில், தனியார் வங்கியில் ஆதித்யா ராவ் பணியாற்றி வந்துள்ளார். சில நாள்கள் கழித்து வேலையை ராஜினாமா செய்தார். பின்னர், மங்களூருவுக்குத் திரும்பினார். அங்கு பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வந்த ஆதித்யாவுக்கு, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தி இருந்துள்ளது.

விமான நிலையம்
விமான நிலையம்

விரக்தி கோபமாக மாறியுள்ளது. இதனால், பழிவாங்கும் விதமாக மங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்க முடிவு செய்துள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பு வெடிகுண்டுகளை தயாரிப்பது குறித்து யூடியூப் வழியாக பார்த்து தெரிந்து கொண்டுள்ளார். பின்னர், வெடி பொருள்களை வாங்கி குண்டு தயாரித்ததாக போலீஸாரிடத்தில் அவர் தெரிவித்துள்ளார். யூடியூப் வீடியோ பார்த்து யார் வேண்டுமானாலும் வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்கிற அளவுக்கு தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தைதை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிறார் வதை வீடியோக்களுக்கு தடை விதிப்பது போல, இது போன்று சமூகத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் வீடியோக்களையும் யூடியூப்பில் அப்லோட் செய்ய தடை விதிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. யூடியூப்பில் நல்ல விஷயங்களை மட்டும் அப்லோட் செய்வது அனைவருக்கும் நல்லது. ஆபத்தை விளைவிக்கக் கூடிய வீடியோக்களை நீக்க யூடியூப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- கௌசிகா இளங்கோவன்